தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருநாவுக்கரசர்

  • திருநாவுக்கரசர்

    (கி.பி. 6-7 நூற்றாண்டு)

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    நாவுக்கரசர் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் திருவாரூரில் பிறந்து வளர்ந்தார். தந்தை பெயர் புகழனார், தாயார் பெயர் மாதினியார். சகோதிரியார் பெயர் திலகவதியார். திருநாவுக்கரசருக்குப் பெற்றோரிட்ட பெயர் மருள்நீக்கியார் என்பது. திலகவதியார்க்கு மணப்பருவம் வந்த போது அவரைக் கலிப்பகையாருக்குத் திருமணம் செய்விப்பதாக இருவீட்டாரும் திருமண முன்னேற்பாடு செய்திருந்தனர். கலிப்பகையார் போருக்குச் சென்று வாதாபி போரில் உயிர் நீத்தார். இந்நிகழ்ச்சியை அடுத்துப் புகழனாரும் மாதினியாரும் உயிர் நீத்தனர். மருள்நீக்கியார் தனித்துயிர் வாழ வேண்டியதை உணர்ந்து அக்காள் உடன் கட்டை ஏறுதலை நிறுத்தினார்.

    தமக்கையார் ஆதரவால் வளர்ந்த திருநாவுக்கரசர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பாடலிபுரத்திற்குச் சென்று சமண நூல்களைக் கற்றார். இதன் பயனாக அவர் சமண சமயத்தைத் தழுவிக்கொண்டார். தம்பியாரின் மனமாற்றத்தைக் கண்ட திலகவதியார் மனம் கலங்கினார். சிவபெருமானிடம் வேண்டினார். திலகவதியார்க்கு இரங்கிச் சிவபெருமானாரும் மருள்நீக்கியாரை மனம் மாற்றம் அடையச் செய்யும் பொருட்டு வயிற்று நோயை உண்டாக்கினார். நோயினால் அளவில்லாத துன்பமும், துயரமும் மருள்நீக்கியார் அடைந்தார். திலகவதியாரிடம் திருநீறு பெற்று அணிந்து வீரட்டானேசுவரரைச் சரணடைந்தார். “கூற்றாயினவாறு விலக்ககிலீர் ” என்று பன்னரிய பல பாடுபட்டு, மரண வேதனைகள் உற்று அழுது புரண்டு வேண்டி இந்தப் பதிகத்தைப் பாடினார். சூலைநோய் நீங்கியது. ஓர் அசரீரி தோன்றியது. “ செந்தமிழால் சொல் வளப்பம் மிக்க பதிகம் பாடினமையால் ” “நாவுக்கரசர்” என்னும் நற்பெயர் நினக்கு எங்கும் வழங்குக என்று அருளியது. சிவபெருமானின் சேவடி மறவாச் சிந்தையராய் தலந்தோறும் சென்று பாடல்பாடி சைவம் பரப்பலானார்.

    இவற்றை எல்லாம் அறிந்த பாடலிபுத்திரச் சமணர்கள் அரசர் மகேந்திர வர்மனிடம் சென்று மருள் நீக்கியார் தாமடைந்த சூலை நோயைச் சிவனார் தீர்த்ததாகப் பொய் சொல்லி சைவத்தைப் போற்றியும் சமணத்தை இகழ்ந்தும் வருகிறார் என்று புகார் கூறினார்கள். மகேந்திர வர்மன் நாவுக்கரசரை அழைத்து வரத் தலைவனை அனுப்பினார். அவரும் அதிகை எசன்ற அவரை அழைத்தார். அப்போது நாவுக்கரசர் “நாமார்க்கும் குடியல்லோம்” என்று தொடங்கும் திருத்தாண்டவத்தைப் பாடி அருளினார். பின்னர் நாவுக்கரசர் மகேந்திர வர்மனிடம் சென்றார். சமணர்களின் ஆலோசனைப்படி அரசன் நாவுக்கரசரை நீற்றறையிலிடுவித்தான். நாவுக்கரசர் ‘மாசில் வீணையும்’ என்னும் பதிகம் பாடினார். சிலநாள் கழிந்தபின் நிற்றறையைத் திறந்து பார்த்தனர். நாவுக்கரசர் இறைமை சிந்தனையால் இருந்தார். பின்னர் நாவுக்கரசருக்கு நஞ்சு உணவில் இட்டு ஊட்டினார்கள். நஞ்சு அமுதமாயிற்று. பின்னர் அவரைக் கொல்லுவிக்கும்படி யானையை ஏவினார்கள். அப்போது “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்” என்னும் பதிகத்தைப் பாடியருளினார். கொல்ல வந்த யானை இவரை வணங்கி விலகியது. பின்னர் கல்லினோடு கட்டி கடலில் இட்டனர். அப்போது “நல்துணையாவது நமச்சிவாயமே” என்னும் பதிகம் பாடினார். கல் துணையாயிற்று. கடலில் மிதந்து திருப்பாதிரிப் புலியூரில் கரை ஏறினார்.

    மகேந்திரப் பல்லவன் சைவ சமயமே சமயம் என்று உணர்ந்தான். பின்னர் நாவுக்கரசர் சீகாழிக்குச் சென்று ஞானசம்பந்தரைக் கண்டார். அவரைக் கண்ட சம்பந்தர் “அப்பரே” என்று அழைத்தார். அப்பொழுதிலிருந்து அப்பர் என்னும் பெயர் எங்கும் பெருகியது.

    அப்பூதியடிகள் என்னும் அந்தணர் நாவுக்கரசர் மீது அளவிலாப் பற்றுக்கொண்டிருந்தார். அப்பூதியடிகளின் மூத்த மகன் (திருநாவுக்கரசு) பாம்பு கடித்துவிட இறந்துவிட்டான். இதனை அறிந்த நாவுக்கரசர் “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் விடம் தீர்த்த பதிகம் அருளினார்.

    அப்பரும் சம்பந்தரும் திருவீழிமிழலையை அடைந்தனர். அங்கு கொடிய பஞ்சத்தின் காரணமாக இறைவனிடம் பொற்காசு பெற்றார். கோயிற் கதவு மூடப்பட்டுக் கிடந்த திருமறைக்காட்டை அடைந்தார். கதவு திறக்கப் பாடும்படி சம்பந்தர் அப்பரை வேண்டினார். அப்பரும் ‘பண்ணின் நேர் மொழியால்’ என்னும் பாடலைப் பாடினார். இது திருத்தோணிப்புரப்பதிகத்தில் உள்ளது.

    கயிலை செல்லலுற்றார். ஒரு முனிவராகச் சிவபெருமான் தோன்றிக் காட்சியளித்து அங்கிருந்த ஒரு பொய்கையில் முழுகுமாறு ஆணையிட்டார். அவர் மூழ்கித் திருவையாற்றிலே பொய்கையில் எழுந்த போது கண்ட காட்சி எல்லாம் சக்தியும் சிவமுமாய் விளங்கின. கடைசி நாட்களில் திருப்பூந்துருத்தியுள் சைவத் திருமடம் அமைத்து அதில் தங்கியிருந்தார். சம்பந்தர் இட்ட பெயரே “அப்பர்” என்பது. தாண்டக யாப்பில் சிறந்து விளங்கியதால் தாண்டக வேந்தர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    அப்பர் ஆற்றிய அற்புதங்கள்

    1. பாம்பு கடித்து மாண்ட அப்பூதியடிகளின் மகனை எழுப்பியது
    2. மறைக்காட்டுக் கதவு பாடித்திறந்தது.
    3. கைலாயக் காட்சியை ஐயாற்றில் கண்டது.
    4. ஓடும் செம்பொன்னம் ஒக்க நோக்கியது.
    5. தெய்வக் கன்னியையும் விரும்பாதது.

    அப்பரடிகளார் 81-வது அகவையில் திருப்புகலூரில் இறையடி எய்தினார். அப்பர் பாடல்கள் சுமார் 4900 என்பர். நமக்குக் கிடைத்துள்ளவை 3066 பாடல்கள். இவை 312 பதிகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவர் பாடல்கள் 4,5,6 திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:16:54(இந்திய நேரம்)