தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில் அமைந்துள்ள பண்கள்

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    திருநாவுக்கரசர் பத்துப் பண்களில் பதிகங்கள் அமைத்துள்ளார். அவையாவன

    1.கொல்லி

    2. காந்தாரம்

    3.பியந்தைக்காந்தாரம்

    4.சாதாரி

    5. காந்தார பஞ்சமம்

    6. பழந்தக்கராகம்

    7. பழம் பஞ்சுரம்

    8. இந்தளம்

    9. சீகாமரம்

    10.குறிஞ்சி.

    கொல்லி

    இது மருதயாழின் முதல் திறமாகிய நவிர் என்னும் திறத்தின் புறநிலைப் பண்ணாக 103 பண் வரிசையில் 70 ஆம் பண் பெறுகிறது. மூவரும் இப்பண்ணில் பாடியுள்ளனர். அப்பர் கூற்றாயினவாறு விலக்கலீர் என்ற முதல் பதிகம் பாடியுள்ளார். கொல்லிக்குரியவை 4 கட்டளைகள் இவையன்றி அப்பர் தேவாரம் 4 ஆம் திருமுறை, பண்களை அடுத்த முதல் திருநேரிசைப் பதிகம் எல்லா திருநேரிசைப் பதிகங்களும் கொல்லிக்குரியனவாகக் கொள்ளப்படுகின்றன. இன்று கொல்லிக்குரிய இராகம் நவரோசு என்று கருதப்படுகிறது. நவசந்தியில் இது ரிஷப சந்திக்குரியது. இது கம்பீரமும், மிருதுவான கருணாரசமும் சாந்தமும் பொருந்தியது என்பர். 29 வது மேளம் தீரசங்கராபரணத்தில் ஜன்யம். இப்பண்ணுக்குச் சுவை மருட்கை, இளிவரல், அவலம் என்று கருதப்படும்.

    பழந்தக்கராகம்

    இது குறிஞ்சிப் பெரும்பண்ணின் ஐந்தாவது திறமான மருளின் புறநிலைப்பண் 54 என்ற எண்ணுக்குரியது. இதன் பழைய உருவம் இன்னதென்று திட்டமாய்த் தெரியவில்லை. ஆயினும் இதற்கு நேரான இராகம் சுத்தசாவேரி என்பது மரபு. இதைச் சிலர் ஆரபியிலும் சிலர் தேவகாந்தரியிலும் பாடுவது உண்டு. இதன் சுவை அவலமும் மருட்கையும். இது இராப்பண்களில் ஒன்று. இப்பண்ணில் சம்பந்தரும் அப்பருமே பாடியுள்ளனர். சம்பந்தர் முதல் திருமுறை 47-62, 16 பதிகங்கள், அப்பர் 4.12-13 ஆகிய இரு பதிகங்கள், “போகமார்த்த பூண்முலையாள்” என்ற சம்பந்தர் மதுரையில் நெருப்பிலிட்ட பதிகம், “மறையுடையாய தோலுடையாய்” என்ற திருநெடுங்களம் இடர்களையும் பதிகம், “திருத்தூங்கானை மாடம்” ஒடுங்கும் பிணிபிறவி என்பது வண்டரங்கப் புனற்கமலம் என்ற அகத்துறைப் பதிகம், நாளாய போகாமே என்ற திருக்கோளிலிப் பதிகம் என்பன சம்பந்தர், அப்பர் சுவாமிகளுடைய அரிய அகத்துறைப் பதிகம் சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் என்பது இப்பண்ணுக்குரியது.

    பழம் பஞ்சரம்

     

    இது குறிஞ்சிப் பெரும்பண்ணின் மூன்றாவது திறமாகிய பஞ்சுரத்தில் புறநிலைப் பண்ணாக எண்40 பெற்றுவருகிறது. இப்பண்ணைச் சங்கராபரண இராகத்தில் பாடுவதே வழக்கு. இதன் சுவை மருட்கை, அவலம். இப்பண்ணில் மூவரும் பாடியிருக்கிறார்கள் சம்பந்தர் 3:100-116, அப்பர் 4:14-15, சுந்தரர் 47-53 ஆக மொத்தம் 26 பதிகங்கள். சம்பந்தர் ஞாலம் நின்புகழே மிகவேண்டும் என்ற பதிகம், உற்றுமை சேர்வது மெய்யினையே என்ற திருவியமகம் மடக்கு, அப்பர்-பாவநாசத் திருப்பதிகமான பற்றற்றார் சேர்பழம்பதியை என்பது, சுந்தரர் ஊர்த்தொகை-காட்டூர்க்கடலே நமசிவாயப் பதிகமாகிய மற்றுப் பற்றெனக்கின்றி ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்ற பாடலுடைய பத்திமையும் அடிமையையும் என்ற பதிகம், திருவாலங்காட்டுப் பதிகம் ஆகியன இப்பண்ணில் அமைந்தவை.

    இனி, சேக்கிழார் துஞ்சவருவாரும் தொமுவிப்பாரும் என்ற திருவாலங்காட்டுப் பதிகத்தை துஞ்சவருவார் எண்றெடுத்துப் பஞ்சுரமாம் பழைய சுரம் கிழமைகொளப் பாடினார் என்று கூறுகிறார். அப்பதிகம் அவர்களிடத்தில் பழம் பஞ்சரமாக இருந்திருக்க வேண்டும் என்று மு.அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்.

    பியந்தைக் காந்தாரம்

    இது மருதப் பெரும்பண்ணின் நான்காவது திறமாகிய செய்திறத்தின் அகநிலைப் பண் 81 என்னும் எண்ணுக்குரியது. இதற்குரிய சுவை மருட்கை சமநிலை என்று சொல்லப்படும். இது காலைப்பண்களில் ஒன்று. இதற்கு இராகம், ஹெஜ்ஜீஜ்ஜி என்றும் இச்சிச்சி என்றும் சொல்லப்படும். ஆனால், நவரோசில்தான் பாடப்படுகிறது. இதில் மூன்று கட்டளைகள் உள்ளன. இப்பண்ணில் மூவரும் பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் 74 பதிகம் 2:83-96, அப்பர் ஒரே பதிகம் 8: சுந்தரர் ஒரே பதிகம் 76. ஆக 16 பதிகங்கள் சம்பந்தருடைய கோளாறு திருப்பதிகம்-வேயுறு தோளிபங்கன், எந்தை யீசன் எம் பெருமான், அப்பர், சிவனெனும் ஓசையில்லது அறையோ உலகில் ஆகியவை பண் சிறப்புடைய பதிகங்கள் ஆகும்.

    காந்தார பஞ்சமம்

    இது மருதப் பெரும்பண்ணின் இரண்டாவது திறமாகிய வடுகு என்னும் திறத்தில் பெருகியலுக்குரிய பண் 76 எண்ணுக்குரியது. இது 65 ஆம் மேளம் மேசகல்யாணியில் ஜன்னியம் என்பர். இதன் சுவை உவகை மருட்கை என்று கருதப்படும். இதை மூவரும் பாடியுள்ளனர். சம்பந்தர் 3.1-23, அப்பர் 4:10-11, சுந்தரர் 77. ஆக 26 பதிகங்கள். இதற்குக் கட்டளை ஒன்றே (சம்பந்தர்) இடரினும் தளரினும் எனதுறு நோய் துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் என்ற திருவைந்தெமுத்துப் பதிகம் அப்பர் சொற்றுணை வேதியன் என்ற நமசிவாயத் திருப்பதிகம் என்பன சில சிறப்புப் பதிகங்கள். இது பகற்பண். இதற்குரிய நேரம் நாழிகை 24-27 (மாலை4-5). இதற்குரிய இசை கோதாரகௌளம்.

    காந்தாரம்

    குறிஞ்சிப் பெரும்பண்ணின் இரண்டாவது திறமாகிய காந்தாரத்தின் அகநிலைப் பண்ணாக 41 என்ற எண் பெற்றது. ஏழிசை வரிசையில் மூன்றாவது இசை (சுரம்) காந்தாரம் இப்பெயரையே ஞானசம்பந்தர் காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் இசைபாட என்று திருவையாற்றுத் தேவாரத்தில் பாடுகிறார். இதற்குச் சுவை பெருமிதமும், மருட்கையும். இப்பண்ணை மூவரும் பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் 2:54-82, அப்பர் 4:2-7, சுந்தரர் 71-75. இவையன்றித் திருவிசைப்பாவில் திருமாளிகைத்தேவர் கோயில் 4 கருவூர்த்தேவர் திரைலோக்கிய சுந்தரம் ஆகிய இரண்டும் காந்தாரபண். இப்பண்ணுக்குரிய யாப்பு விகற்பம் மூன்று சம்பந்தர் மந்திரமாவது நீறு, பன்னிரு திருப்பெயர் கூறும் பிரமனூர் வேணுபுரம் புகலி, அப்பர் சுண்ணவெண் சந்தனச் சாந்தும், மாதர்ப்பிறைக்கண்ணி யானை, கரவாகும் வன்னெஞ்சர்க் கரியானை ஆகிய சிறப்பான சில பாடல்கள் இப்பண்ணிலுள்ளவை. அப்பர் பாடிய பண்ணுடைய பதிகங்களே 21 அவற்றுள்ள காந்தாரத்துக்கு என்பது தனிச்சிறப்பு.

    இந்தளம்

    மருதப் பெரும்பண்ணின் இரண்டாவது திறமான வடுகு என்ற திறத்தில் அகநிலைப் பண்ணாக 73 எண் பெற்றது. சம்பந்தர் இப்பண்ணில்தான் மிக அதிகமான பதிகங்கள் (2:1-39) பாடியிருக்கிறார். அப்பர் 3, சுந்தரர் 12, (1-12) ஆக 54 திருமுறைகளிலேயே இப்பண்ணுக்குத்தான் அதிகமான பதிகங்கள். இவையன்றி, பதினோராந் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையாரின் பதிகங்களில் இரண்டாம் பதிகம் இத்தளம். அம்மையார் பதிகப் பண்ணிலேயே இவர் பாடியதின பொருத்தம். இவர் வரலாறு கூறிய இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஹிந்தோளக என்ற இராகம் என்பர். பெருமிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது. 36ஆம் மேளமாகிய சலநாடா என்பதில் ஜன்னியம். இதற்குரிய இராகம் லளிதபஞ்சமி என்றும் நாதநாமக்கிரியை என்றும் சொல்வதுண்டு. இத்தளத்துக்கு யாப்பு விகற்பங்கள் பலவாகும். திருவிரைப்பாவில் திருவாலியமுதார் கோயில் மூன்றாம் பதிகம் இத் தளப்பண்ணில் அமைந்துள்ளது.

    குறிஞ்சி

    குறிஞ்சியாழ் என்ற பெரும்பண்ணின் எட்டுத்திறங்களில் ஏழாவது திறமாகிய அரற்ற என்ற திறத்தின் அகநிலைப்பண் 103 வரிசையில் 61 ஆவதாகும். இப்பண்ணில் மூவரும் பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் 1:75-103, அப்பர் 4:21, சுந்தரர் 90-94. ஆக 35 பதிகங்கள். இதற்குரிய சுவை திருமுறைதோறும் உவகை, மருட்கை, பெருமிதம் என மாறுவதுண்டு இதில் 5 கட்டளைகள் உள்ளன. சம்பந்தர் கற்றாங்கெரியோம்பி என்ற தில்லைப் பதிகம் வாசிதீரவே, நன்றுடையானைத் தீயதிலானை, வம்பார் குன்றம் நீடுயர் சாரல் என்ற திருக்குற்றாலப் பதிகம். இது 29 ஆவது மேளகர்த்தா தீரசங்கராபரணத்தில் ஜன்னியம் குறிஞ்சி, குறிஞ்சி இராகத்துக்கு நேர் என்பர். மலகரி (பிலகரி)யில் பாடுவது மரபு. குறிஞ்சி நள்ளிரவில் பாடப்படும். அகநானூற்றுப் பாடல் (102.5.9) இதை உணர்த்தும்

    குறிஞ்சிப் பண்ணின் ஆற்றல் குறித்து இப்பாடல் கூறும் செய்தி மிக்க சுவையானது. மலைப்பகுதியில் யானை வந்து தினைக்கதிரை நாசம் செய்த நிலைக்கண் காவல் இருந்த கொடிச்சி குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். கேட்ட யானை தான் பறித்த தினைக்கதிரையும் மென்று விழுங்காது. இடத்தைவிட்டு நிலை பெயராது துயில் வரப்பெற்று அவ்விடத்திலேயே உறங்கியிருந்ததாம். குறிஞ்சியின் கவர்ச்சி அத்தகையது.

    தருமபுரம் ஆதினத்தலைவர் மார்கழி மாதத்தில் தினமும் இடையாமத்தில் நீராடி சிறப்பு அனுட்டானம் செய்தல் வழக்கம். அப்போது ஓதுவார்கள் குறிஞ்சிப் பண்பாடுவது மரபு.

    சாதாரி.

    இது செவ்விழி யாழ் என்றபெரும் பண்ணின் நான்காம் திறமாகிய முல்லையில் புறநிலைப் பண்ணாக எண் 98 பெற்றுள்ளது. சாரங்க தேவர் இதைத் சாதாரிதா என்று சொல்வார் இது 22வது மேளம் கரகரப்பிரியாவில் தோன்றியது எனக் கருதுவர் இன்று பந்துவராளிக்கு நேரான தென்றே கருதப்படுகிறது. இதற்குச் சுவை வீரமும் வெகுளியும், சம்பந்தர் அப்பர் இருவரும் இப்பண்ணில் பாடியுள்ளனர்.

    அப்பர் சுவாமிகள் பதிகம் தலையே நீ வணங்காய் என்பது. இதில் பிற்காலம் கீர்த்தனையின் தொடக்ககாலம் அமைப்பைக் காணமுடிகிறது. என்பது அவர் இசையைப் பேசிய இடத்தில் சொல்லப் பட்டுள்ளது. இது பகற்பண், பகல் நாழிகை 15-18க்குரியது என்று சொல்லப்பெறும். சாதாரிப் பண் தமிழ் இலக்கிய உலகில் சிறப்பிடம் பெற்ற ஒரு பண் என்று இசைத்தமிழ் இலக்கண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீகாமரம்

    இது மருதப் பெரும்பண்ணில் செய்திறம் என்ற பெயருடையது. நான்காம் திறத்தின் புறநிலைப் பிரிவாகிய 82 எண் பெற்ற திறமாகும். இப்பண்ணை மூவரும் பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் 2:40-53, அப்பர் 4:19-20, சுந்தரர் 86-89. ஆக 20 பதிகங்கள். இதற்குக் கட்டளை 2, இதன் சுவை, அவலம் மருட்கை எனப்படும். இது இரவுப் பண் இதற்குரிய ஒப்புமை இராகம் நாதநாமக்கிரியை. தேவார ஆசிரியர்களும் பிறரும் சிகாமரம் என்ற பெயரை காமரம் என்ற குறிப்பிடக் காண்கிறோம். இது 15 ஆவது மேளம் மாயாமாளவ கௌளத்தில் இருந்து கிளைத்தது. இது நவசந்தியில் மேற்கு சந்திக்குரிய பண்ணாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:17:04(இந்திய நேரம்)