தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • அனந்தசாயி

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    வரலாறு:

    வைணவப் படிமங்கள் (சிற்பங்கள்) 3 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிட நிலை என்று மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் கிடந்தநிலைப் படிமங்கள் என்பவை (சயனக்கோலம்) புகழ்பெற்றவையாகும். இது தொடர்பாக நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் போன்றோர் பாடியுள்ளனர். பக்தி இலக்கியங்களுக்கு முன்னதாக இக்கோலம் தொடர்பான செய்தி சங்க இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. இப்படிமம் முதன் முதலாக கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருமயம், நாமக்கல் போன்ற இடங்களிலும் அதன் பின்னர் 9-ஆம் நூற்றாண்டில் மகாபலிபுரத்தில் உள்ள குடவரைகளிலும் வெட்டப்பட்டுள்ளன.

    அனந்த சாயி

    தொன்மபின்னணி:

    பேரூழிக் காலத்தில் பிரபஞ்சம் அழிவுற்றது. அந்நிலையில் திருமால் என்று அழைக்கப்படும் விஷ்ணு திருப்பாற்கடலில் சேஷன் என்ற நாகத்தின் மீது துயில் கொண்ட நிலையில் இருந்து புதிய உலகினைத் தோற்றுவித்தார் என்று இப்படிமம் தொடர்பாகக் கூறப்படும் புராணபின்னணி ஆகும். சேஷஷாயி என்ற படிமத்தின் கலைக் கூறுகள் என்ற நிலையில் இப்படிமம் 2 அல்லது 4 கைகளுடன் நேராகப் பாம்பணையின் மீது கிடந்த நிலையில் அமைக்கப்பட வேண்டும். இப்படிமத்தின் தலை மற்றும் காலுக்கு அருகில் திருமகள் மற்றும் கலைமகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் மார்கண்டேயர் மற்றும் பிருகுபோன்ற முனிவர்கள் படிமங்களும், மது மற்றும் கைடபர் படிமமும் வித்தியாதாரர்களும் அமைக்கப்படலாம். அனந்தசாயி என்று அழைக்கப்படும் இதன் நாபிகமலத்திலிருற்து (தொப்புள்) பிரம்மன் என்று அழைக்கப்படும் நான்முகன் வெளிவருவது போன்று காட்டப்படுவதுண்டு. இக்கோலமே திருவரங்கம் திருக்கோயிலின் கருவறைப் படிமமாக அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:00:25(இந்திய நேரம்)