தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கஜாசூரசம்ஹார மூர்த்தி

  • கஜாசூரசம்ஹார மூர்த்தி

    முனைவர் வே.லதா,
    உதவிப்பேராசிரியர்,
    சிற்பத்துறை.

    புராணப் பின்னணி :

    கஜசூர சம்ஹார மூர்த்தி

    யானையின் உருவம் கொண்ட அசுரனை அழித்து அவன் தோலினை உரித்து ஆடையாகப் போர்த்திய நிகழ்வினை விளக்கும் சிற்ப அமைதியே கஜாசூரசம்ஹார மூர்த்தி வடிவமாகும். காசியில், பிராமணர்கள் கீர்த்திவாசேஸ்வரரை லிங்க வடிவில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். அச்சமயம் யானை உருவம் கொண்ட கஜாசூரன், பிராமணர்களைத் துன்புறுத்தி தவ நிலையைக் கலைத்து, வழிபாட்டினை சிதைத்து அச்சுறுத்தி வந்தான். இதனால் பிராமணர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். கஜாசூரனின் அழிவுச் செயல்களை செவியுற்ற சிவன், கஜாசூரனின் தலையின் மீது கால்களை மிதித்து அழித்து அதன் தோலினைப் போர்வையாகக் கைகளால் தூக்கி அணிந்து கொள்வார். இப்புராணப் பின்னணி கூர்ம புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

    சுப்ரபேதாகமம் குறிப்பிடுகையில், அசுரர்களின் தலைவனான அந்தகாசூரன் தேவர்களையும், கடவுளர்களையும் அச்சுறுத்தி, துன்புறுத்தி வந்தான். கடவுளர்களும், தேவர்களும் அதனைச் சிவபெருமானிடம் கயிலை சென்று முறையிட்டனர். சிவபெருமான் கேட்டறிந்து கொண்டிருந்த வேளையில் அந்தகாசுரன் பார்வதி தேவியைத் தூக்கிச் செல்ல கயிலை வந்தடைந்தான். அப்பொழுது யானை உருவத்தில் நீலன் என்னும் அரக்கன் சிவனை அழிப்பதற்காகக் கயிலை வந்தான். நந்தீசுவரரின் ஆலோசனைபடி சிவன் வீரபத்திரரை உருவாக்கி நீலனை அழிக்க உத்தரவிட்டார். அவ்வாறே யானை உருவங்கொண்ட நீலனைச் சிம்ம வடிவம் கொண்டு அழித்து அவனது தோலினை உரித்து சிவனுக்குப் பரிசாக வீரபத்திரர் வழங்கினார். அதனையேற்று, மேலாடையாக அணிந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவன் அந்தகாசூரனை அழிக்க சப்தமாதர்களை முடுக்கிய பின்னர், கஜாமுகாசூரனை வீரபத்திரர் வாயிலாக வதம் செய்தார். இந்நிகழ்வு கஜாசூரசம்ஹாரம் ஆகையால் சிவபெருமான் கஜாசூரசம்ஹார மூர்த்தியானார்.

    படிமக்கலை :

    கஜாசூரசம்ஹார மூர்த்தி படிமம் சதுர்புஜம் (நான்கு கரங்கள்) அல்லது அஷ்ட புஜங்களில் (எட்டு கரங்கள்) அமைக்கப்பட்டிருக்கும். நான்கு கரங்கள் பெற்றிருந்தால் தந்தம் மற்றும் பாசமும் இரண்டு கரங்களிலும், பின் இரண்டு கரங்கள் யானைத் தோலினைத் தூக்கிப் பிடித்தவாறு அமையப் பெற்றிருக்கும். சிவனின் இடது கால் யானை தலையில் (மஸ்டகம்) ஊன்றியவாறு அமைத்து, வலது காலை வளைத்து இடது காலின் தொடையினளவு உயரத்திற்கு உயர்த்தியவாறு அமைந்திருக்கும். யானையின் வால் சிவனுடைய தலையில் அணிந்துள்ள மகுடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும். சிவனின் அருகில் பார்வதி தேவி மற்றும் பாலகன் முருகன் ஆகியோர் ஈசனின் அரிய செயலினை வியப்பு மற்றும் அச்சத்துடன் நோக்குவது போல அமைந்திருக்கும். சிவனின் முன்புறம் சிவகணங்கள் நின்று கொண்டு முரசு மற்றும் இசைக் கருவிகள் இசைப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.

    சான்றுகள் (புராணங்கள் மற்றும் சாஸ்திரங்கள்) :

    கூர்ம புராணம், வராஹ புராணங்களிலும் காசியபசில்ப சாஸ்திரம், சிரீதத்துவ நிதி, சில்பரத்தினம் ஆகிய சில்ப சாஸ்திரங்களிலும் அம்சுமத் பேதாகமம், சுப்ர பேதாகமம் ஆகிய ஆகமங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

    வரலாற்றுச் சிறப்பு :

    மேற்கிந்திய குடவரையில் புகழ்பெற்ற எலிபெண்டா, குடவரை இச்சிற்பத்தின் பெயரினால் அழைக்கப்படுகிறது. பல்லவர்களின் படைத் தலைவரான பரஞ்சோதி இரண்டாம் புலிகேசியை வென்று வாதாபியைச் சூறையாடிய போது, அங்கிருந்து எடுத்து வரப்பட்ட “வாதாபி கணேசர்” சிற்பம் திருச்செங்காட்டங்குடியில் நிர்மாணிக்கப்பட்ட தேவாரத்தில் “மத யானை உரிபோர்த்து என்று கஜாசம்ஹார மூர்த்தியின் குறிப்புகளிலிருந்து இலக்கியங்களிலும் போற்றப்படுவதை அறியமுடிகிறது. இப்படிமம் சோழர் காலத்தில் சிறப்பான நிலையில் அமைந்ததற்குத் திருவாலீசுரவம், திருச்செங்காட்டங்குடி, தாராசுரம் கோயில்களில் காணலாம். வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள செப்புப் படிமம் சோழர்களின் கலை அழகினையும், இப்படிமத்தின் முழுமையான கலைக் கூறினையும் உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:06:06(இந்திய நேரம்)