தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சாஸ்தா

  • சாஸ்தா

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    சாஸ்தா என்ற இந்துமதக் கடவுள் செவ்வியல் இந்து மதத்தில் ஆரியா, சாஸ்தா மற்றும் ஹரிஹர புத்திரர் என்ற வகையில் அழைக்கப்படுகிறார். இவ்விறைவுருவம் தமிழக நாட்டுப்புற வரலாற்றில் ஐயனார் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் மேற்கூறிய பெயரினைக் கொண்ட கடவுள் தென்னிந்தியாவில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும்.

    சாஸ்தா

    குறிப்பாக, திராவிட நாட்டில் இன்றைய கேரளத்தில் மக்களால் வழிபடப்படும் ஓர் கடவுளாகும். சாஸ்தா என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆசிரியன் அல்லது போதிப்பவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இருப்பினும் சாஸ்தா என்பது தமிழகத்தில் சிலப்பதிகாரம் காலம் தொட்டே வழக்காற்றிலிருந்து வந்தது. சாத்தன் என்பவர் புத்தரின் பெயர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சங்ககாலத்தில் பெருந்தலைச் சாத்தனார், சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் இருந்துள்ளது நோக்கத்தக்க ஒன்றாகும். மேலும் சிலப்பதிகாரம், காவேரிப் பூம்பட்டினத்தில் சாத்தனுக்கு கோயில் ஒன்று இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. கி.பி 7-8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவாரப் பதிகம் ஒன்றில் சாத்தன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

    தொன்மப்பின்னணி :

    தொன்மப் பின்னணியை நோக்கிடும் போது தேவர்கள், அசுரர்கள் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அந்நிலையில் விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்தார். அம்மோகினிக்கும் சிவனுக்கும் தோன்றியவர் ஹரிஹரப் புத்திரர் என்றழைக்கப்படும், சாஸ்தா என்று விஷ்ணு புராணம் விளங்கியுள்ளது. இதே புராணப் பின்னணி சுப்ர பேத ஆகமத்திலும் இடம்பெற்றுள்ளது. அமரகோசம் என்ற நூல் ‘சாஸ்தா’ என்பது புத்தரைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று கூறிப்பிட்டுள்ளது. தமிழ் நிகண்டுகள் இவரைக் குறிப்பிடும் போது சாதவாகனன் (யானை மீது வருபவன்) என்றும், பூரணா மற்றும் புஷ்கலா ஆகிய தேவிகள் இருவரையும் துணையாகக் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளது. தர்மத்தை நிலைநாட்டுபவர் இவர் தர்மசாஸ்தா என்றும் அழைக்கப்படுகிறார்.

    படிமக்கலை :

    அம்சுபத் பேத ஆகமம், சுப்ர பேத ஆகமம், காரண ஆகமம் போன்றவை சாஸ்தாவின் படிமக்கலைக் கூறுகளை விளக்கியுள்ளன. சாஸ்தாவின் படிமம் பொன் மஞ்சள் வண்ணத்தில் அமைதியான முகத்தோற்றத்துடன் மூன்று கண்களுடன் நான்கு கைகளும் கொண்டவராக இருந்திட வேண்டும் என்று விளக்கியுள்ளது. பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருந்திட வேண்டும். சாஸ்தாவின் படிமத்தின் முன் இரு கைகளில் அபய, வரத முத்திரையுடனும் பின் வலது மற்றும் இடது கைகளில் கட்கம் மற்றும் கேடயம் இருந்திட வேண்டும். சுப்ரபேத ஆகமம் முற்றிலும் மாறுப்பட்ட ஓர் படிமக்கலைக் கூறினை விளக்கியுள்ளது. சாஸ்தாவின் படிமம், இரண்டு கைகளும் இரண்டு கண்களுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் மார்பில் யக்ஞபவிதம் இருந்திட வேண்டும் என்றும் கால்கள் இரண்டும் முற்றிலும் மடங்கி யோகாசன நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்றுக் குறிப்பிட்டுள்ளது. இரு கைகளில் ஒன்றில் செண்டு என்று கூறப்படும் ஒரு குச்சியும் மற்றொரு கையில் இலைகள் மற்றும் பழங்கள் இருந்திட வேண்டும் என்று கூறப்படுகிறது. காரண ஆகமம் இவரின் கையில் போதிசத்துவரின் கையில் காணப்படும் வஜ்ர தண்டம் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

    தமிழக வரலாற்றில் சங்ககாலம் தொடங்கி வழிபாட்டிலிருந்த சாஸ்தா தமிழக கிராமங்களில் ஐயனார் என்ற பெயரிலும், இன்றைய கேரளத்தில் சாஸ்தா என்றும் ஐயப்பன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:07:47(இந்திய நேரம்)