தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாமன திருவிக்கிரம அவதாரம்

  • வாமன திருவிக்கிரம அவதாரம்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    தொன்மப் பின்ணணி:

    திருவிகரம அவதாரம்

    சங்க இலக்கியங்கள் பலவற்றில் கூறப்பட்டுள்ள இவ்அவதாரம் என்பது விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகும். இவ்வவதாரத்தின் புராண நிகழ்வுகள் பாகவதபுராணம், மத்சய புராணம், அக்னி புராணம் போன்றவற்றில் விளக்கப்பட்டுள்ளன. பலி என்ற மன்னர் பிரகலாதனின் மகனாவார். அசுர குலத்தைச் சேர்ந்த இவர் பூமி முழுவதையும் தம் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டார். அதன் பொருட்டு வேள்வி ஒன்றினைச் செய்திட முற்பட்டார். பலி மன்னருக்கு ஏற்பட்ட பேராசையையும் தன் முனைப்பையும் அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவர் கால் அடியின் வாயிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோற்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பையும், பேராசையையும் அழித்தார்.

    படிமக்கலை:

    வாமன படிமம் என்பது குள்ளமான தோற்றத்தில் இரு கைகளுடன் அமைந்திருக்கும் வலது கையில் கமண்டலமும், இடது கையில் குடையும் தாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, பிராமணச் சிறுவன் போன்ற தோற்றப்பொலிவுடன் இப்படிமம் அமைக்கப்படிருக்கும் இதன் தொடர்ச்சியாக அமைக்கப்படும் திருவிக்கிரம அவதாரம் நான்கு அல்லது எட்டு கைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். வலது கால் பூமியில் நன்றாக ஊன்றப்பட்டு மற்றொரு கால் உலகங்களை அளப்பதற்காகத் தூக்கிய நிலையிலும் காட்டப் பெற்றிருக்கும். நான்கு கைகளில் பின் கைகளில் சங்கு, சக்கரம், முன் வலக்கை மேல் நோக்கித் தெரியும் வகையிலும் மற்றொரு கை தூக்கப்பட்ட காலுக்கு இணையாக நீட்டபட்டும் காணப்படும்.

    தமிழகக்கலையில் வாமன திருவிக்கிரம்:

    தமிழ்க் கலையில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மாமல்லபுரம் வராக மண்டபத்தில் திருவிக்கிரம படிமம் இடம்பெற்றுள்ளது. இதில் வாமனின் உருவம் காட்டப் பெறவில்லை. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் திருவிக்கிரமன் படிமம் எட்டு கைகளுடனும், இரண்டாம் நந்திவர்மன் கட்டிய வைகுந்தபெருமாள் கோயிலும் காணப்படுகிறது. தென் தமிழகத்தில் நாமக்கல் குடவரையிலும், கட்டுமானக் கோயில்கள் என்ற நிலையில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருவெள்ளறை கோயிலிலும் இப்படிமம் இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:04:33(இந்திய நேரம்)