தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வராக அவதாரம்

  • வராக அவதாரம்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    தொன்மம்:

    வராக அவதாரம்

    வராக அவதாரம் என்பது பன்றியின் வடிவமும் மனித உடலும் இணைந்த விஷ்ணுவின் மூன்றாவது அவதாரக் கோலமாகும். சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம் உள்ளிட்ட வடமொழி இலக்கியங்களில் இவ்வவதாரத்தின் தோற்றப் பின்னணி விளக்கப்பட்டுள்ளது. பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாக்ஷன் என்ற அரக்கன் பூமியில் பல்வேறு பாவச்செயல்களைச் செய்து வந்தான். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பூமியானது கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொணர்வதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். வராகப் படிமம் என்பது ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாக அதன் வடிவத்திற்கேற்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

    வரலாறு:

    வராகார்

    இந்தியக்கலையில் குப்தர்கள் காலத்தில் ஏரான் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட வராகப் படிமம் காலத்தால் தொன்மையானது ஆகும். தமிழகத்தில் கி.பி. 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமல்லபுரம் ஆதிவராகக் குடவரையிலும், அதன்பின்னர் காஞ்சி கைலாசநாதர் குடவரையிலும், திருப்பரங்குன்றக் குடவரையின் தொடர்ச்சியாக பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கட்டுமானக் கோயில்களில் இவ்வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

    படிமக்கலை:

    மத்சயம் மற்றும் கூர்ம அவதார வடிவம் போன்று இப்படிமமும் பாதி மனிதன், பாதி வராகம் என்ற வகையில் ஒருங்கிணைந்த படிமமாகக் காணப்படும். வராகத் தலையுடன் காணப்படும் இப்படிமம் நான்கு கைகளுடன் அமைக்கப்படும். பின்கரங்களில் சங்கு, சக்கரம் அமைக்கப்படும். வலதுகால் வளைந்து ஆதிஷேசன் மீதோ, பீடத்தின் மீதோ ஊன்றப்பட்டு, சில படிமங்களில் வராகத்தின் தொடையின் மீது திருமகள் அமர்ந்தவாறு அமைக்கப்பட்டிருக்கும். அதனை வராகத்தின் முன்கைகள் தாங்கியிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:03:03(இந்திய நேரம்)