பேயோட்டும் சடங்கு்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

மனிதருக்கு ஏற்படும் உள நலக்கேட்டினை நோய் வகைப்பட்டது என்று மருத்துவர் கூறுவர். நாட்டுப்புறங்களில் இத்தகைய கேட்டினைப் ‘பேய் பிடித்து விட்டது’ என்பர். இவ்வாறு மனிதனைப் பிடித்துக் கொண்டதாகக் கருதப்படும் பேயை அகற்றுதல் உளநலத்திற்கும் உடல்நலத்திற்கும் நன்று என்பர். பேய் பிடித்தவர்கள் அப்பேயை ஓட்ட வேண்டிப் பேயோட்டும் தொழிலை மேற்கொண்டவர்களை நாடுகின்றனர். அத்தகையோரைக் கோடாங்கிகள் என்று நாட்டுப்புறத்தில் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டு மக்கள் இயற்கைக்கு அஞ்சி அதன் இயக்கத்தை நன்கு புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் தங்கள் வாழ்க்கைக்கு வகுத்துக் கொண்ட வழியே ‘மந்திரச் சடங்கு’ என்பர். எனவே, அம்மக்கள் தம்முடைய சக்தியை அடிப்படையாகக் கொண்டு தமக்குப் புறம்பாக உள்ள இயற்கையிலும் அச்சக்திகளைக் கண்டு அவற்றைப் பயன்படுத்தி, அடக்க கண்ட கருவியே ‘மந்திரம்’ என்று குறிப்பிடுகின்றனர். இக்குறிப்பு மந்திரச் சடங்குகளின் இன்றியமையாமையைச் சுட்டுவதாகும்.

பேயோட்டும் சடங்கில் பேயோட்டும் கோடாங்கியே இன்றியமையாத இடத்தைப் பெறுவார். அதனால் பேயோட்டும் நிகழ்ச்சியின் இயக்குநர் ‘கோடாங்கி’ என்று குறிப்பிடுவது பொருத்தமுடையதாகும்.

பேயோட்டச் செல்லும் கோடாங்கி தன்னுடன் ‘உடுக்கு’ என்ற தோல் இசைக்கருவி, திருநீறு, பிரம்பு, வேப்பந்தழை ஆகியவற்றைக் கொண்டு செல்வார். அவற்றில் திருநீறு, பிரம்பு, புளியம் விளாறு, வேப்பந்தழை என்பவை பேய்க்குப் பகைப்பொருள்கள் என்பர். மேற்கண்ட இப்பொருட்கள் பேயோட்டும் சடங்கிற்குத் துணைக் கருவிகளாகும்.

பேய் பிடித்தவர் வீட்டிலிருந்து சேவல் அல்லது கோழி, தேங்காய், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, பூக்கள், ஒரு செம்பில் குளிர்ந்த நீர் முதலியவற்றைப் பெற்று பேய்க்குப் படையலாகப் படைப்பர். இப்பொருள்கள் புனிதமானவை என்பதனால் இப்பொருள்களில் தெய்வம் வந்து உறையும் என்று நம்புகின்றனர்.

பேயோட்டும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கோடாங்கி உடுக்கை இசைத்து ஓசை எழுப்புவார். உடுக்கின் இசை இனிமையானது, உள்ளத்தைக் கிளர்ச்சியடையச் செய்யும் பண்பினது. உடுக்கின் பிடிக்கயிற்றில் (நாடா) ஒலி எழுப்பும் மணி கட்டப்பட்டிருக்கும் உடுக்கு இசையுடன் மணியும் அதிர்ந்து ஓசை எழுப்பும் மணியோசைக்குப் பேய்கள் அஞ்சும் தன்மையுடையன.

அச்சம் தரும் (பேய்) நிலையில் ஆட்பட்ட உளநிலைத் திரிபு பேய் பிடித்தவனுக்கு அடித்தளமாகிறது. பேய் தம்மிடமிருந்து விரட்டப்பட்டது என்ற நம்பிக்கையினை உருவாக்குவதன் மூலம், மனம் உடல் எனும் இவைகளை நலமாக்க முடியும் என்ற நிலையின் வழிபட்ட நிகழ்ச்சியே பேயோட்டும் சடங்கு ஆகும்.

பேயோட்டும் சடங்கு அனைத்துச் சமயங்களிலும் காணப்படுகின்றது. சமயம் சார்ந்த மந்திரங்களைச் சொல்லி பேயோட்டப்பட்ட சடங்கியல் நிகழ்வானது பின்னாளில் “பேயோட்டம்” என்ற கலையாக மாற்றம் கொண்டது.