அனுமன் ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

இராமாயணத்தில் குறிப்பிடும் அனுமனைப் போல் வேடம் அணிந்து ஆடும் ஆட்டம் அனுமன் ஆட்டம். இதனைக் ‘குரங்காட்டம்’, ‘மந்தியாட்டம்’ எனவும் கூறுவர்.

கரகாட்டத்தின் துணை ஆட்டம். விழா ஊர்வலங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் கலை. கரகாட்டத்தைச் சேர்ந்த பிற துணையாட்டக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது.

நையாண்டி மேளத்திற்கேற்ப அனுமன் ஆட்டம் ஆடப்படும். இருப்பினும் ‘பம்பை’ என்ற தனி இசைக்கருவிக்காக இவ்வாட்டம் ஆடப்படுகிறது.

தென் மாவட்டங்களில் வைணவ சாதியினர் வாழும் இடங்களிலும், தமிழகத்தில் பரவலாகவும் இவ்வாட்டம் நிகழ்கிறது.

பச்சை நிற மயிர் உறை, நீண்ட வால், கால் சலங்கை, குரங்கு முகமூடி ஆகியன இவ்வாட்டத்திற்குரிய ஒப்பனைச் சாதனங்கள் ஆகும்.

தாவுவது, பல்லை இளிப்பது, கண்ணைச் சுருக்குவது, குரங்கு போல் சேட்டை செய்தல் போன்றன. மேலும் தாளத்திற்கும், நாதஸ்வர இசைக்கும் ஏற்ப ஆடுதல், பார்வையாளர்களிடம் சென்று சைகை செய்து சிரிக்க வைத்தல் ஆகியன நிகழ்த்தப்படுகின்றன.

அனுமனின் அருள் பெற்றவர்கள் ஆடும் ஆட்டமும் அனுமன் ஆட்டம் தான். ஆனால் அது ஒரு கலை வடிவம் இல்லை.

உண்மையான குரங்கை வைத்து ஆடும் ஆட்டமும் குரங்காட்டம் தான். அதைக் காட்டு நாயக்கர், புல்லுக்கட்டி நாயக்கர் ஆகிய சாதியினர் நிகழ்த்துவர். இவர்கள் வளர்க்கும் குரங்கு சர்க்கஸ் வேலை செய்யும் அதற்காக பார்வையாளர்கள், வீடுகளில் உள்ளோர் காசு அல்லது அரிசி கொடுப்பதற்காக நிகழ்த்தப்படுகிறது. இதனை கலை வடிவமாகக் கருதமுடியாது.

அனுமன் வேடம் போட்டு ஆடப்படும் ஆட்டமே கலை வடிவம் ஆகும். தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஆடினும் பார்வையாளர்களைக் குதுகலப்படுத்தும் நோக்கிலே நிகழ்த்தப்படுகிறது.