காவடியாட்டம்

முனைவர் சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

 

தமிழகத்தில் நிகழ்த்தப் பெறும் நாட்டுப்புறக் கலை வடிவங்களில் காவடியாட்டம் குறிப்பிடத்தக்கது. காவடியில் பொருட்களைச் சுமக்கும் பழக்கமானது, பின்னர் ஒரு சிறப்பான ஆட்டக் கலை வடிவமாக வளர்ச்சி பெற்றது. காவடியைத் தோளில் சுமந்து இசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டம் காவடியாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

காவடி என்பது இரு முனைகளிலும் உரிபோல் பொருட்களைக் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு தண்டினைத் தோளில் வைத்துச் சுமப்பதாகும். காவடி என்ற சொல் இலக்கியங்களிலும் காணப்படுகிறது. கிராமப் புறங்களில் ஆற்றிலிருந்து நீர் எடுத்து வருவதற்கு இம்முறை பயன்படுகிறது. அண்மைக்காலம் வரை பிச்சை எடுக்க வந்த சாமியார்களும் காவடியில் ஒருபுறம் சமைத்த உணவைப் பெறும் பாத்திரத்தையும் மறுபுறம் அரிசி பெறும் பாத்திரத்தையும் சுமந்து வந்த நிலை காணப்பட்டது. இது அன்னக் காவடி எனப்பட்டது.

தமிழர்களின் வாழ்வு தொடங்கிய இடம் குறிஞ்சி. குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் குன்றுதோறும் குமரன் என்னும் சொல்லுக்கேற்ப முருகனின் வழிபாட்டுத் தலங்கள் அறுபடை வீடுகள் அனைத்தும் மலையிலே இடம்பெற்றன. முருகனை வழிபட மக்கள் அனைவரும் மலைமேல் ஏறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. வழிபாட்டுப் பொருட்களை காவடியின் இருபுறங்களிலும் கட்டித் தூக்கிச் செல்வர். அவ்வாறு தூக்கிக் கொண்டு மலையேறும் போது களைப்பு ஏற்படாமல் இருக்க பாடல் பாடிக் கொண்டே சென்றனர். அப்பாடல்களே பின்னர் காவடிச் சிந்து என அழைக்கப்பட்டது. அண்ணாமலை ரெட்டியாரின் முருகனைப் பாடிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது.

காவடி வகை

காவடியில் கட்டித் தொங்கவிடும் சொம்பிலுள்ள பொருட்களுக்கேற்ப காவடியானது பால்காவடி, பன்னீர்க் காவடி, பூ காவடி, அன்னக் காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, பாடை காவடி, மாட்டுக் காவடி, மச்சக் காவடி, அலகு காவடி, பட்டறைக் காவடி எனப் பலவகைப்படும். காவடிக்கும் முருகன் கோவில் வழிபாட்டிற்கும் நெருங்கியத் தொடர்புண்டு. முதுகில் அலகு குத்திக் கொண்டு அதனுடன் பிணைக்கப்பட்ட சிறு தேரை இழுத்து வருவது ‘தேர்க் காவடி’ எனவும், உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டு குப்புறப்படுத்த நிலையில் வருவது ‘பறவைக் காவடி’ எனவும் வழங்கப்படுகிறது.

இரண்டரை அடி நீளமுள்ள மரத்தண்டில் இரு முனைகளிலும் சிற்ப வேலைபாடுள்ள பலகைகளைப் பொருத்தி பின்னர் அந்த இரு பலகைகளையும் முங்கில் பிளாச்சியால் மேல் நோக்கி அரைவட்டமாக இணைத்து அந்த அரை வட்டப்பகுதியைப் பட்டுத்துணியால் அழகுபடுத்துவர். அதன்மேல் மணிகளால் அழகுபடுத்துவர். பின்னர் இருபுறமும் உள்ள பலகைகளின் நான்கு மூலைகளிலும் மயிலிறகுக் கற்றைகளைச் சொருகுவர். மரப்பலகைகளின் இருபுறமும் கீழ்நோக்கி இரண்டு இரண்டு சட்டங்களைக் காவடியைக் கீழே நிறுத்த பொருத்துவர். பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சொம்புகளைக் கட்டித் தொங்கவிடுவர். இது வழிபாட்டிற்குரிய காவடியின் அமைப்பாகும்.

முருகன் கோயில்களுக்கு உரியதாக இருந்து வந்த காவடி எடுத்தல் தற்போது அய்யனார் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் காவடி எடுக்கும் நிகழ்வுகளை அறியமுடிகிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிறார்களும் காவடி எடுக்கின்றனர்.

சுமை சுமக்க உதவிய காவடி சடங்கியல் சார்பான காவடியாக மாற்றம் பெற்றது. அதன் பின்னர் பொழுதுபோக்குக் கலையாக காவடி அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தொழிற்முறைக் கலையான ‘காவடியாட்டம்’ அமைந்துள்ளது.

காவடியாட்ட கலைஞர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றனர். முருகன் கோவில் உள்பட மற்ற கோவில்களிலும் அதிகம் ஏற்பாடு செய்யப்படும் காவடியாட்டம் தனி நிகழ்ச்சியாக அமையாமல் கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம் இவற்றோடு சேர்த்தே ஏற்பாடு செய்யப்படுகிறது.

காவடியாட்டம் ஒருவரால் நிகழ்த்தப்படும் ஆட்டமாகும். சமயங்களில் குழு ஆட்டமாகவும் அமையும்.

ஒப்பனை

காவடியாட்டம் தொழிற்முறைக் கலையாக இருப்பினும் ஒப்பனை கோயிற்கலையுடன் தொடர்புடையதாக அமைகிறது. உடையானது பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்துடனும் காவி நிறத்துடனும் தொடர்புடையதாfக் காணப்படுகிறது. முகத்தில் பவுடர், கையில் திருநீற்றுப் பட்டை போல் கைப்பட்டை, நெற்றியில் திருநீற்றுப் பட்டை அதன் மீது குங்குமம், காலில் சலங்கை இதுவே ஆட்டக்காரர்களின் ஒப்பனையாகும். காவடியாட்ட ஒப்பனையில், காவடிக்குச் செய்யப்படும் ஒப்பனையும் முக்கியத்துவம் பெறுகிறது.

வழிபாட்டுச் சடங்கின்போது எடுக்கப்படும் காவடிகளில் பாடல்களும், ‘வேல் வேல்’, ‘அரோகரா’ என்னும் கூட்டுச் சத்தத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால் பொழுதுபோக்குக் காவடியாட்டத்தில் இசைக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது.

காவடியாட்டத்திற்குப் பின்னணியாகக் காவடிச் சிந்துப் பாடல்களை நாதஸ்வரத்தில் நையாண்டி மேளக்காரர் பாட, காவடியாட்டக்காரர் ஆடுவார்.

காவடியாட்ட வகைகள்

தொழில்முறைக் காவடி ஆடும் நிலையை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை, சுழன்றாடுதல், வளைந்தாடுதல், குனிந்தாடுதல், வில்லாடுதல், கைவிரித்தாடுதல், வரவேற்க ஆடுதல் என்பனவாகும்.

இன்றைய நிலையில் தொழில்முறைக் காவடியாட்டத்தில் ஏணியின் மீது காவடியை வைத்துக் கொண்டு ஏறுதல். ஏணியின் உச்சியில் ஒற்றைக் கொம்பில் வயிற்றை வைத்துப் படுத்தவாறு சுற்றி வருதல். தோளில் சுமந்த காவடியைக் கீழே குனிந்து மெல்ல முதுக்குக் கொண்டு வந்து பின்னர் படிப்படியாக்க் கைகளுக்குக் கொண்டு வந்து, தோள் வழியாக பிடரி வழியாக உச்சந் தலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி, இசைக்கேற்றவாறு ஆடுதல், கண்களால் ஊசி எடுத்தல், சோடா குத்துதல் போன்ற நிகழ்வுகளை காவடியைச் சுமந்தவாறே நிகழ்த்திக் காட்டுவது சிறப்பம்சமாகும்.