கதை வாசிப்பு்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

தமிழகத்தின் தென் பகுதியான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கதை வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வில்லிசை கணக்குரிய கதைகளை ராகத்துடன் பாடுவது கதை வாசிப்பு நிகழ்ச்சி ஆகும். மலையாளத்தில் வாயனப் பாட்டு என்றழைப்பர். ஏட்டுச் சுவடிகள் மற்றும் புத்தகத்தைப் பார்த்து கதையை ராகத்துடன் பாடுவதைக் குறிக்கும்.

திருவிழா நடைபெறாத காலங்களில் கோவிலில் இரவு நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தக் கலைக்கு இசைக்கருவியைப் பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் வில்லிசைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

கோவிலில் வழிபாடு செய்பவரோ அல்லது ஊரில் உள்ள ஒருவரோ கதை வாசிக்கின்றனர். கதை வாசிப்பு நடத்தப்படும் கோவில், மடங்களில் கதையின் ஏட்டுப் பிரதியோ கையெழுத்துப் பிரதியோ இருக்கும். இதனால் வல்லிசைக் கதைகளின் மூலங்களைப் பாதுகாக்க இந்தக்கலை பெரிதும் உறுதுணையாக இருக்கிறது.

சுடலைமாடன் கதை, முத்துராமன் கதை, உச்சினி மாகாளி அம்மன் கதை, முத்துப் பாடல்களாக சேத்திரபாலன் கதை, சின்னத்தம்பி கதை, வெட்டுப்பெருமாள் கதை, வல்லரக்கன் கதை மற்றும் இராமாயணம், பாரதக்கதைகளும் வாசிக்கப்படுகின்றன. தற்போது இக்கதை வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது குறைந்து வருகிறது.