டப்பாங் கூத்து்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

‘டப்பா’ என்பது பாலியல் செய்திகளை உணர்த்துபவை. எனவே இவை ஆபாசம், தகாத உறவு ஆகியவற்றை உரையாடல், பாடல்கள், செயல்முறை ஆகியவற்றின் வழி வெளிப்படுத்துவதே டப்பாங் கூத்து எனப்படும். இவை நாட்டுப்புறத் தெய்வ கோவில் விழாவில் தனி நிகழ்ச்சியாக நிகழும்.

இக்கூத்து பெரும்பாலும் ஊருக்கு வெளியே உள்ள இடங்களில் பின்னிரவு நேரத்தில் நிகழும். நையாண்டி மேளக்காரர்களும் இக்கூத்தில் கலந்து கொள்கின்றனர். இக்கூத்தில் கொச்சைச் சொற்களைப் பயன்படுத்துவார்கள். டப்பாங் கூத்துக்கு இசைக்கருவியாகப் பம்பையைக் கொண்டு இசைப்பார். இந்த ஆட்டத்தைப் பார்க்கும் போது ஆர்வமாகவும், மென்மையாகவும், கிளர்ச்சியாகவும் உணர்ச்சித் தூண்டக்கூடியதாகவும் இருக்கும்.

இந்தக் கலை நிகழ்ச்சியில் கணவன், மனைவி இரண்டு பேரும், மாமியார் மருமகனுமாக இரண்டு பேரும், வழிப்போக்கனாக ஒருவரும் ஆக மொத்தம் ஐந்து பேர் பங்கு கொள்கிறார்கள். கணவனாகவும், மருமகனாகவும் நடிப்பவர் பைஜாமா அணிந்திருப்பார். பெரும்பாலும் ஆண்களே பெண் வேடமாக நடிப்பார்கள். அண்மைக் காலமாகக் குறிப்பிட்ட இடங்களில் கரகாட்டக் குழுக்களில் உள்ள பெண்களே இந்த வேடத்தில் நடிக்கின்றனர். மாமியார் வேடக் கலைஞர் பெரிய மார்பகத்தை உடையவராக இருப்பார்.

கணவன் மனைவியாக நடிப்பவர்களும், மாமியார் மருமகனாக நடிப்பவர்களும் உரையாடலின் போது தங்களின் உடலுறவு பற்றிய பாலியல் செய்திகளை விவாதித்துக் கொள்வார்.

இந்த உரையாடலில் பொருந்தா உடலுறுப்பினால் ஏற்படும் துன்பம், மாமியாரை மருமகன் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பம் போன்ற கொச்சைச் சொற்களைப் பற்றி இரட்டை அர்த்த வழக்காறு நிலைகளைக் குறிப்பிடுகின்றனர்.

• மருமகன் மாமியாருடன் உடலுறவு வைத்துக்கொள்வது

• அக்காவுடைய கணவர் மனைவியின் தங்கையோடு உடலுறவு வைத்துக்கொண்டிருப்பது.

• ஒரு பெண்ணைப் பல பேர் பலாத்காரம் செய்வது.

• தவறான முறையில் அதிகமாக உறவு வைத்துக்கொள்வதால் பல கொடிய நோய்கள் ஏற்படுவது. ( எ.கா, எய்ட்ஸ்)

• சிறுமியிடம் தவறான முறையில் அணுகுவது.

இந்த நிகழ்ச்சிக்குப் பெண்கள் பார்வையாளராக வருவதில்லை. பெரும்பாலும் இள வயதுடையவர்களே இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார்கள்.