சாட்ட அடி ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

நீளமான சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டு தனக்குத் தானே இரத்தம் வருமாறு அடித்துக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்கு “சாட்டையடி ஆட்டம்” என்று கூறுவர். இதற்கு கசையடி, சாட்ட நடனம் என்ற இரு பெயரும் உண்டு. தமிழகத்து நகரம், கிராமம் என்ற அனைத்துப் பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆண், பெண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றாலும் ஆண்களே சாட்டை அடித்துக் கொண்டு ஆடுபவர்களாக உள்ளனர். பெண்கள் இசைக்கருவிகளை இசைக்கின்றனர். நிகழ்த்துநர்களே ஆடும் இடத்தினையும், காலத்தினையும் தீர்மானிக்கின்றனர். மக்கள் விரும்பித் தரும் பொருள்களே இவர்களுக்கு வருமானம்.

பல ஊர்களிலும் சாட்டை அடி ஆட்ட நிகழ்ச்சியைக் காணமுடிகிறது. ‘காளியம்மா’, ‘மாரியம்மா’ என்று இடையிடையே உரத்தக்குரலில் ஆவேசமாகக் கத்திக் கொண்டு சவுக்கால் தனக்குத்தானே அடித்துக்கொள்கிறார்கள். அடித்து அடித்து வலக்கையில் தழும்புக் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டுகிறது. இதனைக் காணும் பார்வையாளர்களுக்குத் திடுக்கிடும் நிகழ்ச்சியாக அமைகிறது. இவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் நிலையற்றது. கிராமப்புறங்களில் சாப்பாட்டுக்குக் குறைவு இல்லாமல் உணவு தானியங்கள் கிடைக்கும் என்றும், நகரங்களில் கிடைக்கக்கூடிய தொகை குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் சாட்ட அடி நிகழ்த்துபவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிறு சிறு மூங்கில் குச்சிகளைக் கைக்கு நான்காக இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கோலாட்டம் போல் அடித்து ஆடுவர். சாட்டையால் கைகளில் அடித்துக்கொள்ளுதல், தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கும் வளையத்தினுள் பாய்ந்து வெளியேறுதல், இளம் சிறுவர் சிறுமியர் குட்டிக்கர்ணம் அடித்தல், சிறு இரும்பு வளையத்தில் நுழைதல் போன்றவற்றை நிகழ்த்துகின்றனர். இது போன்ற வித்தைகளைக் காட்டி அரிசி, புளி, மிளகாய், பருப்பு, சமைத்த உணவுப் பண்டங்கள், காசு முதலியவற்றைப் பெறுகின்றனர்.