வைந்தானை ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

நீளமான குச்சியை வைத்துக் கொண்டு சிறுவர்கள் தனியாகவும், சிறுமிகள் தனியாகவும் ஆடும் ஆட்டம் வைந்தானை ஆட்டம் எனப்படும். இது ‘வளர்ந்தானை’ என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.

இக்கலையானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் நிலாக்கால இரவு நேரத்தில் தான் நிகழ்த்தப்படுகிறது. பொழுதுபோக்கு விழாக்களிலும், மாரியம்மன் கோவில் விழாக்களிலும், அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்துச் செல்லும் விழாக்களிலும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. பங்குனி மாதத்தில் தினமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அந்த மாதத்தின் இறுதியில் முடிக்கப்படுகிறது.

இந்த ஆட்டம் கோவில் விழாச்சடங்குகளுக்குத் தொடர்புடையதாகவும், பொழுதுபோக்குக் கலையாகவும் திகழ்கிறது. இக்கலைக்கென்று இசைக் கருவிகள் ஏதும் இல்லை. கால் சதங்கை மட்டுமே இவ்வாட்டத்தின் பின்னணி இசையாகும். இக்கலை நிகழும்போது பாடப்படும் பாடல்கள் அம்மன் வழிபாடு தொடர்புடையதாக மட்டுமின்றி, சமுகப் பிரச்சனைகள் பிற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியதாகவும் பாடப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆண்கள் தனியாகவும் சிறுமிகள் தனியாகவும் ஆடுகின்றனர். 30 பேர் கொண்ட கலைஞர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆட்டத்தில் பெண்கள் ஆடுவதில்லை.

வைந்தானை ஆட்டம் ஒரு வகையில் கழியலாட்டம் கோலாட்டம் போன்ற கலைகளை ஒத்தே காணப்படுகிறது. 18 செ.மீ நீளமுள்ள மரக்குச்சியைக் கைகளில் வைத்து அடித்துக்கொண்டு இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. குச்சிகளில் வண்ணத்தாள்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.

இவ்வாட்டம் வட்ட வடிவ ஆட்டமாக நிகழும். வட்டத்தின் நடுவில் ஒரு கல் வைக்கப்பட்டிருக்கும் அக்கல்லைப் பெண் தெய்வமாகக் கருதுகின்றனர். அதனைச் சுற்றியே வைந்தானை ஆட்டம் ஆடப்படும். பாடப்படும் பாடல் இசைக்குத் தகுந்தவாறு ஆட்டம் நிகழ்த்தப்படும் இந்த ஆட்டத்தைக் ‘கோயிலாட்டம்’ எனவும் கூறுவர்.

இக்கலையைத் தனியாகவே ஆடிப்பழகிக் கொள்கின்றனர். இதற்கென்று பயிற்சியாளர்கள் ஏதும் கிடையாது. ஆட்டத்தைப் பார்த்தும் ஆடுபவர்களிடம் கேட்டும் இவ்வாட்டத்தைக் கற்றுக்கொண்டு பின்பு ஆடுகின்றனர்.

இவ்வாட்டத்தினைப் பின்னலாட்டம் பூச்சரம், முடிச்சு அவிழ்த்தல், சங்கிலி, முடிபு ஆகிய ஐந்து வகைகளில் அடக்கலாம். பின்னலாட்டம் 30 நிமிடங்கள் நிகழும். இந்த ஆட்ட முறையின் உச்சக்கட்டத்தில் ஆட்டக்காரர்கள் பின்னிப் பிணைந்து ஆடுவதால் இப்பெயர் பெற்றது. இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள் தாம் நின்ற இடத்தில் காலால் வட்டம் போட்டுக் கொள்ளுவர். ஒருமுறை ஆடிப் பின் இறுதியில் தாம் வரைந்த வட்டத்திற்குள் வருவதே இந்த ஆட்டத்தின் தனித்தன்மையாகும். ஆடும் போது தன் கையில் உள்ள கழியால் மாறி மாறி அடித்துக்கொள்ளுதல், அடித்தவரின் கழியிலும் அடித்துக் கொள்ளுதல், அடித்துக் கொண்டே சுழன்று வருதல் என்ற முறையில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

பூச்சர ஆட்ட முறையானது ஆடப்படும் முறையின் அடிப்படையில் அப்பெயர் பெறுகிறது. இதில் காலடி எடுத்து வைக்கும் முறை பூவைச் சரமாகத் தொடுப்பதுபோல் இருக்கும். இவ்வாட்டத்தில் ஆட்டக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தே பாடுவார்கள்.

முடிச்சு அவிழ்த்தல் ஆட்டத்தில் ஆட்டக்காரர் ஒருவர் மட்டுமே பாடுவார். இவ்வாட்டத்தில் இராமநாதபுர மன்னர்களின் செயல்களைப் பற்றிப் புகழ்ந்து பாடுவார்.

இரண்டு பேர் வரிசையாக நின்று சங்கிலி போல் இணைந்து ஆடுவது சங்கிலி ஆட்டம். இந்த ஆட்டத்திலும் ஒருவர் தான் பாடலைப் பாடுவார்.

இறுதியாக வட்டமாக நின்று ஆடுவதை முடிவு ஆட்டம் என்று கூறுப்படுகிறது. இறுதி ஆட்டத்திலும் இறை வணக்கப் பாடல்கள் பாடப்படும்.

இன்றைய நிலையில் இவ்வாட்டத்தில் திரையிசைப் பாடல்களின் செல்வாக்கு அதிகமாக மிகுந்துவிட்டது.