|
என்பன அப்பதினோரு ஆடல்கள். புராணக் கருத்துகள் இவ்வாடல்களில் கலந்து இருந்தன என்பதை ஆடல்வகையின் விளக்கங்கள் காட்டுகின்றன. பாடுவோர் ஒவ்வொரு ஆடலுக்கும் ஏற்பப் பண் கூட்டுவர். பண்கள் நூற்று மூன்று என்பார், உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார். பழந்தமிழகத்தில் ஒவ்வொரு நிலத்துக்கென ஒரு யாழ் வகையும் ஒரு பண்ணுமிருந்தன. இவை காலப்போக்கில் பெருகி வளர்ந்தன. யாழ் என்பது பண்டைய இசைக்கருவி. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் எனப் பிற்காலத்தே இதனை நால்வகையாக்கினர்..
1.2.3 சிலம்பு : ஒரு பண்பாட்டுக் கருவூலம் பெண் வழிபாடு : சிலப்பதிகாரம் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம் என்றே கூறலாம். அது காட்டும் பண்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது பத்தினி வழிபாடாகும். சங்க காலத்தில் இறந்த வீரனுக்குக் கல்லெடுத்து வழிபடுவதற்குக் கூறப்பட்ட செயல்களெல்லாம் சிலம்பில் கண்ணகிக்குக் கூறப்படுகின்றன. கல்லைக் காணுதல், அதனைத் தேர்ந்து கொள்ளுதல், நீரில் ஆட்டுதல், கோட்டத்தில் நிலை நிறுத்துதல், வாழ்த்துதல் ஆகியன வீரர்க்கே என்றிருந்தன. இவற்றைக் கண்ணகிக்குரியனவாக ஆக்கிப் பத்தினி வழிபாட்டை அக்காலத்தவர் போற்றியிருக்கின்றனர். பத்தினி மழையைத் தரக் கூடியவள் என்ற கருத்து மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் கடவுளாக உயர்த்தப்பட்டதைக் காணுகிறோம். பத்தினிக் கோட்பாடு: இளங்கோவடிகள் சமயம் பற்றிய கருத்துகளைக் கூறியிருப்பினும் பத்தினிக் கோட்பாடு என்னும் பெண்மையின் உயர்நெறியையே இக்காப்பியத்தில் சிறப்புறப் போற்றியுள்ளார். கண்ணகி கணவனைப் பிரிந்து வருந்தும்போது அவளுடைய பார்ப்பனத் தோழி தேவந்தி, "சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் பொய்கைகளில் மூழ்கிக் காமவேளைத் தொழுதால் கணவனைப் பெறலாம்" என்கிறாள். கண்ணகி அதற்கு, அது "பெருமை தருவதன்று" என்கிறாள். இதுவே தமிழர் பண்பாட்டு நெறியென அடிகளால் காட்டப் பெறுகின்றது. அறம் பிறழ உயிர் பிரியும் அரச மாண்பு : அறநெறி தவறியதை அறியும் அரசன், அது தன் மானத்துக்கு ஊறு என உணர்கிறான்; உடனே தன் உயிர் துறந்து அறத்தை நிலைநிறுத்துகிறான். 'உயிர் நீப்பர் மானம் வரின்' என்ற பழந்தமிழரின் பண்பாடு இங்குப் போற்றப்படுகிறது. தமிழரசரின் உணர்வு ஒருமை : தமிழரசர்கள் மூவரும் தனித் தனியே தம் பகுதியை ஆண்டிருந்தாலும் அவர்களிடையே உணர்வு ஒருமை இருந்தது. தமிழரசரைப் பழித்தமை கேட்டு நான் அமைதியாக இருக்க இயலாது என ஆர்த்தெழுகிறான் செங்குட்டுவன். தன் உயிரை விட்டு நீதி காத்த நெடுஞ்செழியனுக்காகச் செங்குட்டுவன் பரிவு கொள்கிறான். அரசர்களிடம் இத்தகைய பண்பாடு அக்காலத்தில் நிலவியது. அறத்தின் வலிமை: சிலப்பதிகாரம் அறம் வலிமை மிக்கது என்று காட்டும் நூல். கோவலன் ஏன் கொலை செய்யப்பட்டான்? அவன் போன பிறவியில் ஒருவன் கொலை செய்யப்படக் காரணமாக இருந்தான். அதனால் இந்தப் பிறவியில் கோவலன் கொலை செய்யப்பட்டான். கோவலனை ஆராயாமல் கொன்றதனால் அரசன் உயிரைவிட நேர்ந்தது. அதிகாரம் மிக்க அரசனையே வீழும்படியாகச் செய்தது எது? அதுதான் அறம். அறத்திலிருந்து தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்கமுடியாது என்று காட்டுகிறது சிலப்பதிகாரம். அறத்தின் சிறப்பைச் சிலப்பதிகாரம் உரைப்பதை இன்னொரு நிகழ்ச்சியாலும் அறியுங்கள்! தேவன் ஒருவன், அழகும் ஒளியும் உடையவன்; ஆயினும் கருங்குரங்கின் கையை உடையவனாக இருந்தான். இவ்வளவு அழகுடைய இவனுக்குக் குரங்குக் கை ஏன் வந்தது என்று பலரும் கேட்டனர். ஒருவன் அதற்கு விடை கூறினான். சாயலன் என்ற வணிகனுடைய மனைவி துறவிகள் பலருக்கு நாள்தோறும் உணவிடும் வழக்கம் மேற்கொண்டு இருந்தாள். அவ்வாறு உணவிடும் போது ஒரு கருங்குரங்குக்கும் உணவிட்டுக் காப்பாற்றினாள். அக்குரங்கு இறந்த பின்னர் அதன் நினைவாகத் தானம் செய்தாள். அதனால் அக்குரங்கு காசி அரசனுக்கு மகனாகப் பிறந்தது. அவ்வாறு தோன்றிய இளவரசன் பின் பல நல்ல அறங்களைச் செய்து தேவகுமாரன் ஆயினான். தனக்காக ஒருத்தி தானம் செய்ததால் குரங்குப் பிறவி நீங்கிற்று என்பதைக் காட்ட இத்தேவகுமாரன் குரங்குக் கையைக் கொண்டிருக்கிறான் என்று ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது. அறத்தின் வலிமையை இப்படிப் பல நிகழ்ச்சிகளால் எடுத்துரைக்கின்றது சிலப்பதிகாரம். ஊழ்வினையில் நம்பிக்கை : ஒரு பிறவியில் செய்த நன்மைகளும் தீமைகளும் அடுத்த பிறவியில் செய்தவனை வந்து அடைந்தே தீரும் என்ற கருத்து 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சிலப்பதிகாரத்தால் வற்புறுத்தப்படுகிறது. சிலப்பதிகாரக் கதைப்படி முற்பிறவியில் கோவலன் செய்த தீவினையால் இப்பிறவியில் வெட்டுப்பட நேர்ந்தது என அறிகிறோம். இது பாண்டியனின் தவறு அன்று; ஊழ்வினையின் முடிவு என்பது சிலம்பு கூறும் கருத்தாகும். தெய்வமாகிய கண்ணகியும் பாண்டியன் தீதற்றவன் எனக் கூறக் கேட்கிறான் செங்குட்டுவன். நெடுங்காலமாகவே இந்தியச் சமயங்கள் பலவும் ஊழ்வினை என்பதை அழுத்தமாகப் பரப்பி வந்திருக்கின்றன. கோவலன் பல துன்பங்கள் அடைந்து வருந்துவதைப் பார்த்த மாடலன் என்பான். என்று கூறுகிறான். இதன் பொருள் என்ன எனத் தெரியுமா? இந்தப் பிறவியில் நீ செய்ததெல்லாம் யானறிந்த வரையில் நல்ல வினைகளே. ஆனால் இப்போது நீ வருந்துவதற்கு முற்பிறவிச் செயல்களே காரணம் போலும் என்பதாகும். (இம்மை - இப்பிறவி; உம்மை - முன்பிறவி). |