முதன்முதலில் நிகண்டுகளைத் தமிழுக்கு அளித்தவர்கள் சமணர் ஆவர். சொற்பொருளை விளக்குவது நிகண்டுகள். நிகண்டு, சொற்களை அடுக்கிக் கூறுவது. இவை பலபொருள் குறித்த ஒரு சொல் எனவும்,  ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் எனவும் இருவகைப்படும். எடுத்துக் காட்டாக, ‘பகவனே ஈசன் மாயோன், பங்கயன், சினனே புத்தன்’ (சூடாமணி நிகண்டு) பகவன் என்னும் சொல், சிவன், திருமால், பிரமன், அருகன், புத்தர் ஆகிய பொருள்களைத் தரும். ‘வழுதி கூடற்கிறைவன், மீனவன், பஞ்சவன், மாறன், வேம்பின் கண்ணியன், மதிகுலன், கைதவன், கௌரியன், தமிழ் நாடன், வண்புனற் குமரி சேர்ப்பன், செழியன், வைகைத் துறைவன், மீனம் உயர் கொடியினன், தென்னவன், பொதியவெற்பன், செப்புமீரெட்டுமே பாண்டியன் பெயராம்’ (ஆசிரிய நிகண்டு) பாண்டிய மன்னனைக் குறிக்க இத்தனைச் சொற்கள் உள்ளன. அகராதி  முறைப்படி இச்சொற்கள் அகரவரிசையில் அமைக்கப்படவில்லை.

சிறப்புக் கூறுகள்

நிகண்டு, மொழிக்கல்விக்குப் பெரிதும் துணைபுரிவதாகும். மொழியின் பரந்துபட்ட சொற்கூட்டத்தைப் பயில்பவனுக்கு அகராதி பயன்படுகிறது. அகராதி போல ஒரு காலகட்டத்தில் நிகண்டுகள் பயன்பட்டன.

அகராதிகள் ஒரு மொழியின் வளமையைக் காட்டி நிற்கும். தமிழில் உள்ள நிகண்டுகள் ஒருவிதத்தில் அகராதிகள் எனலாம். ஆனால் இன்றைய அகராதிகள் போல் அவை இல்லை. ஆயினும் அகராதியின் பயனை அவை ஓரளவு தந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

நிகண்டுகள் தோன்றக் காரணம்
  • மேலைநாடுகளில் அகராதியை இயற்றும் முயற்சி 18-ஆம் நூற்றாண்டில் தான் துவங்கியது.

  • தொல்காப்பியம் அகராதிக் கலைக்கான மூலக்கூறுகளை உரியியலில் எடுத்துக் கூறுகிறது.

  • அச்சுக்கலை தோன்றாத கால கட்டத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய செய்யுள் வகையில் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் வரிசைப்படுத்தி நிகண்டுகள் இயற்றப்பட்டன.

    பள்ளிகளை ஆங்காங்கே அமைத்துக் கல்வியைப் பரப்பிய சமணர்கள் நிகண்டுகளைப் படைப்பதில் ஆர்வம் கொண்டதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் மொழி பயிலவும் பயிற்றுவிக்கவும் அவை பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டும்.

    நிகண்டிற்குக் கடைகாலிட்டுக் (அடிப்படை அமைத்து) கோட்டை கட்டியவரெல்லாம் சமணர்களே ஆவர். மேனாட்டார் அகராதி தொடங்கு முன் சமணரின் நிகண்டு முயற்சியே சிறந்திருந்தது. தொல்காப்பிய உரியியலில் தொல்காப்பியர் சொற்களுக்குப் (313) பொருள் விளக்கம் தருகிறார். அகராதிக் கலைக்கு வேண்டிய மூலக்கூறுகளை உரியியலில் கண்டறிந்த சமணச் சான்றோர்க்கு நிகண்டுகளைத் தோற்றுவிக்க அதுவே காரணமாகவும் அமைந்திருக்கலாம்.

 

3.2.1 திவாகரம்

நிகண்டுகளில் முதன்மையானது திவாகரம். ஆதிதிவாகரம் என்று இதனை அழைப்பர். திவாகர முனிவரால் இயற்றப்பட்டது. திவாகரத்தில் 9500 சொற்களும் 384 ஒருபொருட்பன்மொழிச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. இதனைச் சேந்தன் திவாகரம் என்றும் வழங்குவர். நிகண்டுகளில் பழமையானதும் இதுவே. இந்நூலாசிரியர் சமணர். இவரைச் சைவர் என்று கூறுவாரும் உண்டு.

3.2.2 பிங்கலந்தை

திவாகர நிகண்டிற்குப் பிந்தியது பிங்கலந்தை. இதன் ஆசிரியர் பிங்கலர். 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் இவரைச் சுட்டுவதால் அதற்கும் முந்தியதாக இருக்க வேண்டும். இதில் முதல் ஒன்பது பகுதிகளில் மட்டும் 14700 சொற்கள் உள்ளன. பத்தாம் பகுதியில் பலபொருள் குறிக்கும் ஒரு சொல் என்ற முறையில் அமைந்த 1091 சொற்கள் உள்ளன.

இவர், தம் நூலை உரிச்சொற்கிளவி என்று சுட்டியதாகக் கூறுவர். இந்நூலைத் தம் நன்னூலில் சுட்டும் பவணந்தி உரிச்சொல் என்றே சுட்டிக் காட்டினர்.

3.2.3 சூடாமணி நிகண்டு

சூடாமணி ஆசிரியர்தான் முதன் முதலில் நிகண்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறுவர். இதனை இயற்றியவர் மண்டல புருடர். பிங்கல நிகண்டிற்குப் பின்னர்த் தோன்றிப் பரவலாகத் தமிழ்நாடு எங்கும் பயன்படுத்தப்பட்ட நூலாகும். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கான சான்றுகள் கிடைப்பதால் இவர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்ததாகக் கொள்ளலாம். முக்குடை நிழற்ற மின்னு பூம்பிண்டி நிழல் வீற்றிருந்தான்’ என்றும் (மூன்று குடைகளின் கீழ் மின்னுகின்ற அசோகமரத்தின் நிழலில் வீற்றிருந்தான்) பூமலி அசோகின் நிழல் பொலிந்த எம் அடியார்’என்றும் அருகனைத் துதிக்கிறார்.  அதனால் இவர் சமணர் என்பது தெளிவாகிறது.


அமைப்பு

சூடாமணி நிகண்டு 12 தொகுதிகளை உடையது. ஒவ்வொரு தொகுதியை ஆரம்பிக்கிற போதும் அருகவணக்கம் பாடுகிறார். 11-ஆம் தொகுதி தற்கால அகராதிபோல அமைந்துள்ளது. இதற்கு முன் இவ்வமைப்பு இல்லை. 11,000 சொற்கள் உள்ளன. பலபொருள் ஒரு சொற்கள் 1575.

நிகண்டு காலம் சொற்கள் பலபொருள்
ஒருசொல்
திவாகரம் குறிப்பிடப்படவில்லை 9500 384
பிங்கலந்தை 12-ஆம் நூற்றாண்டு 14700 1091
சூடாமணி 16-ஆம் நூற்றாண்டு 11000 1575