விஜயாலய சோழனால் தோற்றம் பெற்ற பிற்காலச் சோழ மரபில்
அவனைத் தொடர்ந்து அவன் மகன் முதல் ஆதித்த சோழன், அவன் மகன் முதலாம் பராந்தக
சோழன், அவன் மகன் கண்டராதித்த சோழன், அவன் தம்பி அரிஞ்சய சோழன், அவன் மகன்
இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தர சோழன், கண்டராதித்த சோழன் மகன் உத்தம சோழன்,
சுந்தர சோழன் மகன் முதலாம் இராஜ ராஜன், அவன் மகன் இராஜேந்திரன், அவன் மகன்
முதலாம் இராஜாதிராஜன், அவன் தம்பி இரண்டாம் இராஜேந்திரன், அவன் தம்பி வீரராஜேந்திரன்,
அவன் மகன் அதிராஜேந்திரன் ஆகியவர்களுடன் ஒரு கிளையினர் ஆட்சி கி.பி. 846
- இல் தொடங்கி 1070 - இல் நிறைவுற்றது. அதிராஜேந்திரன் மறைவுக்குப் பின்பு
ஆண் வாரிசு இல்லாததால், கங்கைகொண்ட சோழன் எனும் முதலாம் இராஜேந்திரனின் மகள்
அம்மங்கை தேவி, கீழைச்சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் ஆகிய தம்பதியரின்
புதல்வனான முதலாம் குலோத்துங்கன் சோழப்பேரரசனாக முடிசூடிக்கொண்டான். இவன்
தாய்வழியில் சோழ அரச உரிமையைப் பெற்றவனானான். குலோத்துங்கனுக்குப் பிறகு
அவனது மைந்தன் விக்கிரமசோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவனது புதல்வன்
இரண்டாம் இராஜராஜன், விக்கிரம சோழனின் மற்றொரு பெயரனான இரண்டாம் இராஜாதிராஜன்,
இரண்டாம் குலோத்துங்கனின் மகனான மூன்றாம் குலோத்துங்கன், அவன் மகன் மூன்றாம்
இராஜராஜன், அவன் மகன் மூன்றாம் இராஜேந்திரன் என ஒருவர் பின் ஒருவராகச் சோழ
அரசு கட்டிலில் அமர்ந்து கி.பி.1279 வரை ஆட்சி செய்தனர்.
|