| முனிவிலர் - யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சித் துஞ்சலும் இலர் - பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அது தீர்த்தற்பொருட்டு மடிந்திருத்தலு மிலர்; புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் - புகழ் கிடைக்கின் தம்முடைய உயிரையும் கொடுப்பர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் - பழியெனின் அதனால் உலகமுழுதும் பெறினும் கொள்ளார்; அயர்வு இலர் - மனக்கவற்சியில்லார்; அன்ன மாட்சி அனையராகிய - அப்பெற்றித்தாகிய மாட்சிமைப்பட்ட அத்தன்மையராகி; தமக்கென முயலா நோன்றாள் - தமக்கென்று முயலாத வலிய முயற்சியையுடைய; பிறர்க்கென முயலுநர் - பிறர் பொருட்டென முயல்வார்; உண்மை யான் - உண்டாதலான் எ-று.
அஞ்சித் துஞ்சலு மில ரென மாறிக் கூட்டுக. இவ்வுலகம் பிறர்க் கென முயலுந ருண்மையான் உண்டெனக் கூட்டுக. ஆலும் அம்மவும் அசை.
விளக்கம்: இந்திரரென்றது, ஈண்டுத் தேவர்களை. அமிழ்தம் அவரது உணவாகலின், அவர் விரும்பின் வந்தெய்தும் வையத்தினும், தவம் மிகப் பெரிதாகலின், தவத்தால் வந்தெய்தலாம். அதனால், “தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயின்”என்றார், “வையமும் தவமும் தூக்கின் தவத்துக், கையவி யனைத்து மாற்றாது” (புறம். 358) என்று சான்றோர் கூறுதல் காண்க. “தெண்கட லமிர்தம் தில்லையா னருளால் வந்தால்” (திருக்கோ. 12) என்பதனாலும், அமுதம் மக்கள் முயற்சியால் பெறலாகாமை யுணரப்படும். யாவர்பாலும் அன்புடைய ரென்றற்கு “முனிவிலர்”என்றும், பிறர் அஞ்சுவதெல்லாம் பழியாகலின், அதற்குத் தாமும் அஞ்சினர். அச்சமுண்டாகிய வழிச் செயலறுதி யுண்டாதலின், அதனைமறுத்து, அஞ்சத்தகும் துன்பத்தைப் போக்கச் சோம்புதலுறார் என்பான், “துஞ்சலு மிலர்” என்றும், குற்றப் படலும் அதனால் மனத்தே கவலையும் எய்துவதில ரென்றற்கு, “அயர்விலர்” என்றும், மேற்குரித்த குணஞ்செயல்களையுடையா ரென்பான், குணத்தை “அன்னமாட்சி”யென்றும், செயல்களை “அனையாராகி”யென்றும் கூறினான்.
183. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியருள் நெடுஞ்செழியன் என்னும் பெயருடைய வேந்தர் பலர் இருந்திருத்தலின், அவரின் வேறுபடுத்தற்கு இவனைச் சான்றோர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என இவனது வென்றிச்செயலை யெடுத்தோதிச் சிறப்பித்துள்ளனர். ஆரியப்படை யென்பது வடவாரிய நாட்டுப்படைவீரர்களையாகும். தென்குமரிக்குத் தெற்கிலிருந்த தமிழகம் கடல் கோட்படவே, பாண்டியரும் சோழரும் சேரரும் “இடஞ் சிறிதென்னும் ஊக்கம்துரப்ப” நிலம் வேண்டி வடபுலத்தே முன்னேறிச் சென்று கொண்டிருக்கையில், வடவாரியரும் தென்பகுதி நோக்கி வந்த வண்ணமிருந்தனர். அங்ஙனம் வருவாரைக் கற்சிறைபோலத் தாங்கி நிற்றலும், அடிவீழ்ந்து புகலடைத்தோரைப் பேணி யோம்புதலும் தமிழ் மூவேந்தருடைய செயல்களாயின. |