பக்கம் எண் :

151
 

178. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.

(பொ-ள்.)கொல்லை இரு புனத்துக் குற்றியடைந்த புல் - கொல்லையாகிய பெரிய நிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்த புல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு - உழவரது உழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்; மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல் செல்லா செற்றார் சினம்-வலிமையில்லாதவரே யாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச் சார்ந்தவர்மேல் பகைவரது சினம் பயன்படாமற்போம்.

(க-து.)நல்லாரினத்திற் சேர்ந்திருப்பார்மேற் பகைவர் சினம் செல்லாது.

(வி-ம்.)குற்றி - சிறுகட்டை; ஈண்டுக், கொல்லையில் வளர்ந்து தரையளவாக வெட்டப்பட்டுவிட்ட வேர்க்கட்டை. ஒல்காமைக்கு இங்குக்கெடாமைப்பொருளுரைக்க. "ஒல்கிய எழில்"1என்றவிடத்துக் "கெட்ட அழகு" என்று நச்சினார்க்கினியர் உரை கூறினமை காண்க. மெல்லியரென்றது அறிவு, ஆற்றல், பொருள், நிலை முதலியவற்றிற் சிறியர் என்னும் பொருட்டு. நற்சார்வு, இந்நிலைகளிற் பெரியாராயினாரது துணை. சினம், பகையின்மேற்று, செல்லாது என்பது கடைகுறைந்து நின்றது. "தக்காரினத் தனாய்த் தானொழுக வல்லானைச், செற்றார் செயக்கிடந்த தில்"2என்றார் நாயனார்.

(8)

179. நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.

(பொ-ள்.)நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர் சான்றோர் - நிலத்தின் வளத்


1. கலித். 8 : 4
2. குறள் 45 : 6.