தினாற் செழித்து வளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இன நலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மை யுடையோராவர்; கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்கு - மரக்கலத்தின் வலிமையைக்கொடிய புயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல, சான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் - தீய இனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மை அழியும். (க-து.)இயல்பாகவே நல்லோராயிருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கை நன்மையையும் தீயினச் சேர்க்கை தீமையையும் உண்டாக்கும். (வி-ம்.)நிலத்துக்கு நலமாவது வளம். குலம்-கலந்து பழகுவோர் இனம். இச்செய்யுள் சான்றோரைக் கருத்திற்றாதலின் அவர் மேலுமேலுஞ் சான்றோராகுவரென்று முதற்பகுதிக்கு உரைக்கப்பட்டது. கலத்துக்கு நலமாவது அலைகளாற்றாக்குறாது செல்லும் உறுதி. உவமைக்கேற்றபடி பொருளின் எழுவாய் தீயினம் ஆகவேண்டுமாயினும், அதனாற் கருத்துக்கு இழுக்கின்றென்க. இது, "உவமப்பொருளை யுணருங்காலை, மரீஇய மரபின் - வழக்கொடு படுமே"1என்பதனாற் றெளியப்படும். (9) 180. மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர்; - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே, எறிபுனந் தீப்பட்டக் கால். (பொ-ள்.)புனத்துவெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப் பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்து விடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர்-ஆதலால், சான்றோர் தம் மனநலத்தால் மாசிலராயினும் தாம் சேர்ந்த தீய இனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.
1. தொல். உவம. 21,
|