(க-து.)சான்றோர் மனநலம் நன்குடையராயினும் தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர். (வி-ம்.)இகழப்படுவர் சான்றோரென்று கொள்க. இகழப்படுவரென்னுங் குறிப்பால் இனம் தீயினத்துக்காயிற்று. மணங்கமழ்தல் வேங்கைக்குங்கொள்க. "வேங்கை கமழுமெஞ் சிறுகுடி"1என்றார் பிறரும். வேமே என்னும் ஏகாரம் இரக்கம் புலப்படுத்திற்று. எறிதலென்னும் ஆற்றலாற் பெருங்காற்றெனப்பட்டது. காடுகளிற் காற்றினால் மரங்கள் உராய்ந்து தீப்பற்றுதல் இயல்பாகலின் எறிதல் என்பது இப்பொருட்டாயிற்று. புனத்துச் சந்தனமும் வேங்கையும் அப்புனம் எறிபுனமாய்த் தீப்பட்டக்கால் வேமென்னும் பொருட்டுப் புனம் மறித்துங் கூறப்பட்டது. உம்மைகள் எண்ணொடு உயர்வு சிறப்பும் ஆம். (10) 19. பெருமை [நல்லினத்தாரது பெருந்தன்மை உணர்த்துவது] 181. ஈத லிசையா திளமைசே ணீங்குதலால் காத லவருங் கருத்தல்லர்; - காதலித்து ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள். (பொ-ள்.)ஈதல் இசையாது - உலக வாழ்க்கையானது வறியவர்க்கு ஒன்று விரும்பியபடி கொடுத்தல் இயலாததாயிருக்கின்றது; இளமை சேண் நீங்குதலால் காதலவரும் கருத்தல்லர் - இளமை நிலையும் நெடுந்தொலைவில் நீங்கிப் போதலால் காதலன்புடைய மனைவியரும் வரவர விருப்புடையரல்லர்; காதலித்து ஆதும் நாம் என்னும் அவாவினைக் கைவிட்டு போவதே போலும். பொருள்-ஆதலின் உலகவாழ்க்கையிற் பற்றுக்கொண்டு நாம் ஆக்க முறுவோம் என்னும் அவாவினைக் கைவிட்டுத் துறவுநெறியில் ஒழுகுவதே பயன்றருவதாகும்.
1. குறுந். 355.
|