கிளக்குங்காலை"1என்பதனால் இது முடிக்கப்படும். பேதையாரென்றதனானும் உணர்ந்தார் என்றதனானும் அவ்வவற்றின் உயர்வு தாழ்வுகள் விளங்கின. என்றும் என்றார், தம் இளமைப் பருவத்தும் அனைத்து நலங்களும் வாய்ந்த காலத்தும் பரிவதில ரென்றற்கு. (2) 183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய் நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம் இன்றிப் பலவு முள. (பொ-ள்.)மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய்-மறுமைக்கு வித்தாகிய அறச்செயலை வாழ்க்கையில் மயங்குதலில்லாமற் செய்து எஞ்ஞான்றுந் துன்புறாமல் நீவிர் அறிஞராய் வாழுங்கள்; ஏனென்றால், நின்றுழி நின்றே நிறம் வேறாம் - நின்ற நிலையில் நின்றே உடம்பின இளமையொளி வேறாய் மாறும்; காரணமின்றிப் பலவும் உள - அன்றியுங் காரணமில்லாமலே பல இடையூறுகளும் வாழ்க்கையில் உள்ளன. (க-து.)மறுமை நினைவோடு ஒழுகுதலே பெருந்தன்மையாகும். (வி-ம்.)வித்தென்றது, வித்துப்போன்றதை; அறிஞராய் வாழ்மின் என்க. நம்மையறியாமலே நிறம் வேறாம் என்றற்கு ‘நின்றுழி நின்றே' யென்றும் இம்மைச் செய்காரணம் இன்றாயினும் என்றற்குக் ‘காரணமின்றி, யென்றுங் கூறினார். மற்று, உளவாதல் உம்மைச் செய் காரணத்தாலென்று கொள்க பலவும் என்றது. "அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்."2 (3) 184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது.
1. தொல். வினை. 48. 2. நாலடி. 18 : 3
|