வென்னுங் கருத்தில் நின்றது. சிறியோர் மிக்க கொடுமை செய்தாராயினுமென்றற்குக் ‘கருநரையைக் கொன்றன்ன' வென்றது, ‘கருநரைமேற் சூடு' என்று முற்கூறியதையே தந்தெடுத்துக் கொண்டபடி யென்க. பெரியோரை அனைவரும் விளக்கமாகத் தெரிந்திருப்பாராதலின், அவர்பாற் றோன்றுஞ் சிறு குற்றமும் விளக்கமாகத் தோன்றுவதாயிற்று. ‘உயர்ந்தார்ப் படுங்குற்றமும் குன்றின்மேல் இட்ட விளக்கு"1என்றார் பிறரும். (6) 187. இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட் பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண் பகையேயும் பாடு பெறும். (பொ-ள்.)இசைந்த சிறுமை இயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் - தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடைய பண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந் துன்பமேயாம்; அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவினார்கண் - மாறிய செயல்களை விளையாட்டாகவும் விரும்பாத சிறந்த அறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகை கொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும். (க-து.)பெரியோரிடத்துப் பகை செய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச் செய்தல் பெருந்தீங்கு பயக்கும். (வி.-ம்.) இயல்பென்றார், உலகியல்புக்கேற்ப வொழுகும் பெருந்தன்மையாகிய பண்பை.2பசைதல், உள்ளம் நெகிழ்ந்து சென்று பற்றுதல். அசைந்த : வினையாலணையும் பெயர். நகையேயும் பகையேயும் என்னும் உம்மைகள் இழிவு சிறப்பு. (7) 188. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து) ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம் சலவருட் சாலச் சலமே; நலவருள் நன்மை வரம்பாய் விடல்.
1. பழமொழி. 80. 2. கலித். 133.
|