மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்ட கருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே, தூய மனத்தார் விளக்கினுள் ஒண் சுடர் போன்று விளக்கினில் எரியும் ஒள்ளிய தீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர். (க-து.)பிறர் சொல்லுங் கோளுரைகட்குச் செவிகொடாமை பெருந்தன்மையாகும். (வி-ம்.)முகத்தின் கடுமை புலப்படுத்துவதற்குக் ‘கடுக்கி' என்றார்; "மடித்த செவ்வாய்க்கடுத்த நோக்கின்"1என்றார் மணிமேகலையினும், மயங்கிவிடினும் என்றமையாற் சான்றோர் மயக்கினமை பெறப்படாது; ஒருவன்தான் மயங்குஞ் செயலைத் தீர நிகழ்த்தினமையே பெறப்படும். அச்செயல் முற்றினமை தெரித்தற்கு ‘விடு' என்னுந் துணிவுப்பொருள் விகுதி நின்றது. துளக்கமின்மை தூய்மையைக் காட்டுமாகலின், தூயமனத்தாரென்று மேன் மக்களின் பெருமை கூறப்பட்டது; சுடர், தூய்மைக்கு உவமம். சுடரின் ஒண்மை மனத்தின் தூய்மைக்குக் கொள்க. (9) 190. முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும். (பொ-ள்.)முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர் சான்றவர் - முதலில் உண்ண எடுக்குங் கவளத்தை நாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்த களவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத் துற்று-பிறர்க்கு உதவிசெய்த அந்தக் கவளம், முக் குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள் நீக்கிவிடும் - அப் பெரியோருடைய காம வெகுளி மயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப் பிறவி தீருங் கால முழுமையும் அவரைத் துன்பத்தினின்று நீக்கிவிடும்.
1. மணிமே. 6 : 45.
|