(க-து.)முதலில் பிறரை உண்பித்துப் பின்பு தாம் உண்டு துயர் தீர்தலே பெருந்தன்மையாகும். (வி-ம்.)துற்றுதல்-உண்ணுதல்; ஆதலின் துற்று, ஒரு வாய் அளவு உணவுக்காயிற்று; "இகலன்வாய்த் துற்றிய தோற்றம்"1என்றார் பிறரும். முக்குற்றம் நீக்கி அதனால் துக்கத்துள் நீக்கிவிடும் என்க. முக்குற்றம் நீக்கியவளவே பிறவி தீர்தலின்றி எடுத்த வினை தீருமளவும் அஃதிருக்குமாகலின், அவ்வாறிருக்குங் கால முழுமையும் துக்கத்துள் நீக்கிவிடுமென்றார். "உதவிவரைத் தன்றுதவி"2யாகலின், உதவியது ஒரு கவளமாயினும் அது பெரும் பயன் றந்தது. 20. தாளாண்மை [முயற்சியுடைமை உணர்த்துவது.] 191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் தாளாளர்க் குண்டோ தவறு. (பொ-ள்.)கோள் ஆற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் - நீர்கொள்ளுதலை நிரம்பக் கொள்ளாத ஏரியின் கீழுள்ள பயிரைப்போல், கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப - தமக்கு உறவினர் கொடுப்பதை உண்டு சுற்றங்கள் சோம்பிக் கிடந்து பின் அவர் வறுமைப்பட்டபோது தாமும் வருந்தியிறப்பர்; வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்கு உண்டோ தவறு - வாட்கூத்து ஆடுகின்ற கூத்துப் பெண்டிருடைய கண்களைப்போல் உழலும் முயற்சியுடையார்க்கு இப் பிழைபட்ட வாழ்வு உண்டோ?
1. களவழி நாற். 28. 2. குறள். 11 : 5.
|