(க-து.)ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் முயற்சியுடையரா யிருக்க வேண்டும். (வி-ம்.)உவமங்களின் கருத்துக்கள் பொருள்களின் விளக்கங்களில் வந்திருக்கின்றன. நீரை மிகுதியாகக் கொள்ளாத குளம் முயற்சியுடைய கேளிர்க்கு உவமமாக வந்தது, அக்கேளிரின் சுற்றங்கள் சோம்பிக் கிடத்தலால் அவருக்க வருவாய் மிகுதியாக அமையாமையின் என்க. துஞ்சுப : தொழிலின்றியிருந்து பின் இறப்பரென்னும் பொருட்டு. "உலகு தொழிலுவந்து நாஞ்சில் துஞ்சி"1"நிலமிசைத் துஞ்சினார்"2என்பன காண்க. வாளாடு கூத்தியர் - வாட்களை இரு கைகளிலும் பிடித்து விரையச் சுழற்றித் தாமுஞ் சுழன்று கூத்தாடும் இள மகளிர்; ஆடுமகளிருள் இவர் ஒரு வகையார்; இவர் கண்கள் அஞ்ஞான்றும் மிக முயற்சியுடையவனாய் வாள் முனைகள்மேல் விரையத் திரிந்து திரிந்து பிறழ்ந்துழலும். அவ்வாறு கருமமே கண்ணாயிருக்கும், பேரூக்கமாகிய முயற்சியுடைமைக்கு அவர் கண்கள் உவமமாகக் கூறப்பட்டன. தடுமாறுதல் - ஈண்டு, உழன்று முயலுதல். (1) 192. ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்; வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின். (பொ-ள்.)ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதும் காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும். துவள்கின்ற இளங்கொம்பாகி வழியிடையே நின்ற சிறு மரமும் உள்வயிரங் கொண்டு முற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரிய கட்டுத்தறியாக உதவும்; வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன் தாழ்வின்றித் தன்னைச் செயின் - ஒருவன் முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற் செய்து கொள்ளுவானாயின் அவன் தனது வாழ்க்கையிற் பெருமை கொள்ளுதலும் அது போன்ற தன்மையதேயாம். (க-து.)எளிய நிலையிலுள்ளோரும் முயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச் செய்து கொள்ளல்வேண்டும்.
1. அகம். 141. 2. நாலடி. 21.
|