(வி-ம்.)வழியில் வரும் யானையைப் பாகர் அங்கே வலியதாய் நிற்பதொரு மரத்திற் கட்டுவராதலின், ‘அதரிடை' யென்றார். ‘அதரிடை ஆடு கோடாகி நின்றதும்' என்று கொள்க. இழிவு சிறப்பும்மை : கோடாகி நின்றதற்கு வந்தது. கண்ணென்றது ஈண்டுக் காலப் பொருட்டு. அணைக்கும் என்றார், அதனாற் கந்து பெருமைப்படுதலின். தாழ்வின்றித் தன்னைச் செய்து கொள்ளலாவது, "தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை"1யென மேற் கூறப்படுபவற்றில் தன்னைக் குறைவிலனாகச் செய்துகொள்ளலென்க. (2) 193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியுந் தின்னும்; - அறிவினால் காற்றொழில் என்று கருதற்க கையினால் மேற்றொழிலும் ஆங்கே மிகும். (பொ-ள்.)உறுபுலி ஊன்இரைஇன்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும் - வலிமை மிக்க புலி தனக்கேற்ற இறைச்சியுணவில்லாமல் ஒரோவொருகால் சிறிய தவளையைப் பிடித்துந் தின்னும்; அறிவினால் கால் தொழில் என்று கருதற்க - ஆதலால், தமக்குரிய அறிவு மேம்பாட்டினால், எதனையும் காலால் செய்தற்குரிய சிறு தொழிலென்றுயாரும் கருதாதிருப்பராக; கையினால் மேல் தொழிலும் ஆங்கே மிகும் - அச்சிறு தொழிலையும் பொருள் செய்தொழுகும் முயற்சியினால் உயர்ந்த தொழிலும் அதிலிருந்தே பெருகிவரும். (க-து.)சிறு தொழிலையும் முயற்சியோடு திருத்தமாகச் செய்ய வேண்டும். (வி-ம்.)உவமத்திற் புலிக்கு உடம்பு வலிமை கூறப்பட்டமையின், பொருளிலும் அறிவு வலிமை காட்டுதற்கு ‘அறிவினால்' என்றார். ஊனிரையின்றி யென்றமையின், தேரையின் ஊன் சிறுமை பெறப்பட்டது. தேரை தின்று பசியாறிய ஒரு சிறு தணிவிலிருந்து பேரிரை பற்றும்
1. நாலடி. 20 : 5.
|