பக்கம் எண் :

164
 

வன்மை புலிக்குண்டாதலின், சிறு தொழிலையும் பொருள் செய்தொழுகும் முயற்சியிலிருந்தே மக்கட்கு உயர்தொழிலும் பெருகிவருமென்பது கருத்து. கையினால் முயற்சி யொழுக்கத்தாலென்க.

(3)

194. இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.

(பொ-ள்.)கண்டல் திரை அலைக்கும் கானல் தண்சேர்ப்ப - தாழையை அலைகள் சிதைக்கின்ற கடற்கரைச் சோலையையுடைய குளிர்ந்த துறைவனே!, இசையாது எனினும் - மேற்கொண்ட காரியம் ஊழ்வினையினால் எளிதிற் கூடி வராதாயினும், இயற்றி ஓர் ஆற்றால் - அவ்வூழ் இப்பிறவியில் வழி செய்துவிட்ட ஒரு வகையினால், அசையாது நிற்பதாம் ஆண்மை - தளராமல் நின்று முயல்வதே ஆடவர்க்குரிய ஆண்மைப் பண்பாகும்; இசையுங்கால் பெண்டிரும் வாழாரோ மற்று - மற்று, ஊழ் கூட்டுதலால் ஒன்று எளிதிற் கூடி வருமாயின் பெண்மக்களும் அதனை முடித்துப் பெருமையடையாரோ!

(க-து.)ஊழ் கூட்டாதவிடத்தும், அரிய காரியங்களைச்செய்தலில் தளர்வின்றியிருந்து முயலும் ஆண்மையே தாளாண்மையாகும்.

(வி-ம்.)இயற்றிய வென்னும் அகரம் தொக்கது; ஊழ் இயற்றித் தந்த என்பது பொருள்; இயன்ற ஒரு வகையினால் என்பதன் கருத்தும் இது. நிற்பது - நின்று முயல்வது; இசையுங்கால் : வினையெச்சம். வாழாரோ என்பது ஈண்டு முயன்று பெருமையடையாரோ வென்னுங் கருத்தினின்றது; இஃது அறி பொருள் வினா.1ஊழ்கூட்டுங்காற் சிறிது முயன்று ஒன்று நிறைவேறப்பெறுதல் பெண்டிர்க்கும் இயலுமென்றமையின், அஃதன்று தாளாண்மை யென்னும் ஆடவர் பண்பு என்பது இவ்வாற்றாற் பெறப்படும், மற்று : வினைமாற்றென்க.

(4)


1. தொல். கிளவி. 13.