195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகும் குலம். (பொ-ள்.)நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை - நல்ல குலமென்றும் கெட்ட குலமென்றும் உலகத்திற் பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ் சொல்லளவே யல்லால் அதற்குப் பொருளில்லை. தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் - குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினையுடைய செல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும். (க-து.)தவம் கல்வி ஆள்வினை முதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால் நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர். (வி-ம்.)சொல்வது என ஒரு சொல் வருவிக்க. தொல் சிறப்பின் என்பதைத் தவம் முதலியவற்றிற்குங் கொள்க. பிறப்புப்பற்றிய குடியினும், தவவுணர்வு கல்வியறிவு ஆள்வினையியல்பு பொருளாக்கம் என்பன நெடுங்காலமாக விளங்கி உரை பயின்றுவரும் பழம் பெருஞ் சிறப்பினவாகலின், தொல் சிறப்பின் என்னும் அடையடுத்து வந்தன. பொருளுக்கு ஒண்மை, நல்வழியான் ஈட்டப் பட்டமை. உயர்குலத்துக்கு முதன்மையான காரணங்கள் தவமுங் கல்வியும் ஆள்வினையுமாகலின், ‘இவற்றான் ஆகுங் குலம்' என்று உம்மை கொடாது முடித்ததுமன்றிப் பொருளை ஒன்றோவென்னும் இடைச்சொற் கொடுத்தும் வேறு பிரித்தார். "தத்தங் குறப்பிற் பொருள்செய்குநவும்"1என்பதனால் ஈதுணரப்படும். குலம் என்றது. குழு ; உள்ள மேம்பாடுடையோர் குழுவென்க. (5)
1. தொல். இடை. 2.
|