196. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. (பொ-ள்.)ஆற்றுந் துணையும் அறிவினை உள் அடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார் - நுண்ணுணர் வுடையோர் ஓர் அருஞ்செயலைச் செய்து முடிக்குமளவும் தமது அறிவின்றிறத்தை மனத்தில் அடக்கித் தம் முயற்சிகளைப் பிறர்க்குச் சொல்லார்; ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் - மேலும் அவர், தமது ஆற்றலைத் தம்கண் முதலிய உறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கேற்ற அறிவு விளக்க முடையவர்; குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு - உலகம் அத்தகைய திறமையான தாளாண்மை யுடையாரின் குறிப்பின் வழிப்பட்டது. (க-து.)முயற்சிகள் உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும் நடைபெறுதல் வேண்டும். (வி-ம்.)அறிவென்றது திறமைப் பொருட்டு, "வழிபடுவோரை வல்லறி தீயே"1என்றதும் அது, ஊக்கம் இரண்டனுள், முன்னது முயற்சியையும் பின்னது அம்முயற்சியின் வீற்றினையும் உணர்த்தும். எடுத்த காரியத்தில் வேறின்றி நிற்பவரென்றற்கு ‘உணர்வுடையா' ரென்றார். ‘ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மையுடையார்' என்றற்குப் பிறர் முயற்சிகளை மட்டும் அவர்தம் செய்கைக் கூறுகளாலும் முகத்தின் உறுப்புக்களாலும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் அறிவு மாட்சிமை யுடையாரெனவும் பொருளுரைத்து அதனை இரட்டுற மொழிதலாகக் கொள்க. உலகம் அத்தகையோர் கருத்தின்வழி இயங்கிக் காரியம் எளிதில் நிறைவேறப்பெறுதலின், அவ்வொண்மையுடையார் குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு என்றார். (6) 197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்.
1. புறம். 10.
|