அலரி"1என்புழிப்போலப் பொதுவாக மலரென்னும் பொருட்டு, ‘தேங்கமழ் நாற்றம்' என்பதில் தேன் பெயர்க்கும் நாற்றம் ஆண்மைக்கும் ஒக்கும். ‘கரும்பு ஈன்ற' என்றார், உயர்குடியுட் பிறந்தும் என்றற்கு. ‘நாற்றம் இழந்தாங்கு ஆண்மையிலாக்கடை' யென்க. பொறித்தல், நூலிலுங் கல்லிலுமாம். (9) 200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங் கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். (பொ-ள்.)பெருமுத்தரையர் பெரிது உவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் - முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர் என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடிய உணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும் அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற, தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற் கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் - அவர்க்கத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல் உறுதி. (க-து.)தன்முயற்சியால் உண்டானது நீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய் நலம் பயக்கும். (வி-ம்.)பெருமுத்தரைய ரென்போர், இச் சிறப்புப் பெயருடன் இச்செய்யுளியற்றிய ஆசிரியர் காலத்தில் ஈகையும் செல்வமும் வாய்ந்து புகழுற்று விளங்கிய ஒருசார் உயர் குடும்பத்தினராவர். "நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவாதார்" என்று இந்நூலில் மேலும்2இவரது மாட்சி கூறப்படுகின்றது. பிறர் தரும் சோறு ஆர்வார் கயவர் என்றபடி. இடைவிடாத முயற்சியினால் நல்ல உணவும் உண்பதற்கு நேரம் வாயாதவ ரென்றும் கருமமே கண்ணாயினார் உயர் உணவிற் கருத்திருத்தா ரென்றும் உணர்த்துதற்குக்
1. முல்லைப். 9-10. 2. நாலடி. 30 : 6
|