(பொ-ள்.)முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர் - கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும் வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறு பிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டு விடுவர்; சுட்டுக்கோல்போல எரியும் புகுவர் நட்டா ரெனப்படுவார் - ஆனால் உறவானவரெனப் படுவோர் அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக் கோல்போல் தம்முடன் எரியும் புகுந்து உடன் துன்புறுவர். (க-து.)உறவினர் உற்ற நேரத்திற் கைவிடாதவராதலின் அவரைத் தாமும் என்றுந் தழுவி நிற்றல் வேண்டும். (வி-ம்.)முட்டிகைபோல வென்றார், பிறரை இச்சகத்தால் வருத்தி இடித்துண்ணுதலின். கொட்டி என முட்டிகையின் வினையினாலேயே கூறப்பட்டது. "கொட்டு வினைக்கொட்டிலும்"1என்றது காண்க ஈண்டு உண்ணுதலென்பது, வயிறு பிழைக்கைக்கு வந்தது. உலைக்கூடத்தில் இரும்பு முதலிய பொருள்களைத் தீயில் இடும்போது குறடு அதனை விட்டுவிடும்; உலையாணியென்னுஞ் சுட்டுக்கோல் உடன்புகும். ஆதலின், கைவிடுவோர்க்கும் கைவிடாதோர்க்கும் முறையே அவை இரண்டும் உவமமாக வந்தன. கம்மாளர் கருவிகளே செய்யுளில் ஒரு சேர உவமமாக வந்தமை நயமுடைத்து. (8) 209. நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும் இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக் கால். (பொ-ள்.)நறுமலர்த் தண் கோதாய் - சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வதொன்று உண்டோ - உறவினர்க்கு உறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?; இறுமளவும் இன்புறுவது
1. பெருங். மகத. 4, 16
|