பக்கம் எண் :

178
 

"வேறிருந்து" எனப்பட்டது. தன் போல்வாரென்றார், தன்னை மதிப்பாரென்னும் பொருட்டு. நீர்க்குத் ‘தயங்கும் என்னும் அடை, புல்லரிசிதானும் போதிய தின்றி வெறும் நீருணவாய் விளங்குதலையும், புற்கைக்குத் ‘தண்' என்னும் அடை, அக் கஞ்சி தானுஞ் சூடின்றி ஆறியிருத்தலையுங் குறிப்பானுணர்த்தும். புற்கையும் என இழிவு சிறப்பும்மை கொள்க. என்பு : ஆகுபெயராய் உடம்புக்காயிற்று. "என்பும் உரியர் பிறர்க்கு"1என்புழிப் போல. எளிய உணவாயினும் அன்பென்னும் அமிழ்தோடு கூடியதாகலின் அதுவே உடம்புக்கு ஊட்டந் தருமென்றற்கு ‘என்போ டியைந்த அமிழ்' தென்றார். இச்செய்யுட் கருத்துக்கள் முன்னும் வந்தன.2

(10)

22. நட்பாராய்தல்

நட்புச் செய்தற்குரியாரை அவர் கல்வியறிவு ஒழுக்க முதலியவற்றால் ஆராய்ந்து கொள்ளுதல்.

211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.

(பொ-ள்.)கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தின் கரும்பு தின்றற்று - கல்வியின் பயன் தெரிந்து உரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மேலோருடைய நட்பு எஞ்ஞான்றும் குருத்திலிருந்து கரும்பு தின்றாற் போன்றது; குருத்திற்கு எதிர்செலத் தின்றன்ன தகைத்து என்றும் மதுரம் இலாளர் தொடர்பு - கல்வியின் இனிமையில்லாத கீழோருடைய தொடர்பு என்றும் கரும்பை அதன் குருத்திற்கு நேரே செல்லும்படி அடியிலிருந்து தின்று சென்றாற்போன்ற தன்மையுடையது.3


1. குறள். 8 : 2.
2. நாலடி. 21 : 6, 7.
3. நாலடி. 14 : 8.