(க-து.)கற்றார் நட்பு மேன்மேலும் இன்பம் தந்து செல்லும். (வி-ம்.)குருத்தின் என்னும் ஐந்தனுருபு எல்லைப் பொருளது. குருத்திலிருந்து கரும்பு தின்னுதல் மேன்மேலும் இன்பந் தந்து செல்லுதற்கும், அடியிலிருந்து கரும்பு தின்னுதல் வரவர இன்பங் குறைந்து செல்லுதற்கும் உவமம். ‘எஞ்ஞான்றும்' ‘என்றும்' என்பன இடருற்ற நிலையிலும் என்பதைக் குறிப்பா லுணர்த்தி நின்றன. ஏகாரமும் அரோ வென்பதும் அசை. கரும்புவமைக் கேற்பக் கல்வியறிவை ஆசிரியர் இறுதியில் மதுரமெனக் கூறி மகிழ்ந்தார். (1) 212. இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர் நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ் புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட! மனமறியப் பட்டதொன் றன்று. (பொ-ள்.)பொன்கேழ் புனல் ஒழுகப் புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம் அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சி நீங்குகின்ற பொலிவினையுடைய மலைநாடனே, இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர் நல்புடை கொண்டமையல்லது மனம் அறியப்பட்ட தொன்றன்று - குடிப்பிறப்புக் கருதி இவர் இடையில் வேறு படார் என்பதொரு சிறந்த வகையை உட்கொண்டு நட்புச் செய்ததல்லது மனம் அறிந்த உண்மை வேறொன்றனால் அன்று. (க-து.)நட்பாராய்தற்குக் குடிப்ப்றிப்பொன்றும் சிறந்த காரணமாகும். (வி-ம்.)உயர்குடியிற் பிறந்தார்க்கு இயல்பாகவே பெருந்தன்மை உண்டாகலின், ‘இற்பிறப்பெண்ணி' யென்றார்; எண்ணியென்றது, ஈண்டு நம்பியென்னுங்குறிப்புடையது. நற்புடை - நற்காரணம் என்னும் பொருட்டு. "உறுகுறை மருங்கின்"1என்புழிப்போல, நட்புச் செய்த
1. முருகாற். 173.
|