மைக்கு இற்பிறப்பென்பதல்லது வேறு மனமறிந்த காரணம் ஒன்றின்று என்பது கருத்து; இவ்வாற்றால் இற்பிறப் பொன்றும் நட்புக்கு இலக்கணமாம் என்று அதன் மேன்மை உணர்த்தியவாறாம். கேழ் ஒழுகவென்க. ஒழுகுதல், ஈண்டுத் தொடர்புற்று வருதல், பொற்றுகளுஞ் செந்தேனும் ஏற்று வருதலால் அருவி பொன்னின் விளக்கம் பெற்றமையின், அவ்விளக்கங் கண்டு பறவைகள் அஞ்சி நீங்கினவென்பது. (2) 213. யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய். (பொ-ள்.)யானையனைவர் நண்பு ஒரீஇ - யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி, நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் - யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்; எறிந்த வேல் மெய்யதா வால் குழைக்கும் நாய் - ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால் வால் குழைத்து நிற்கும். (க-து.)பிழை பாராட்டாத இயல்புடையாரை அறிந்து நட்புச் செய்தல் வேண்டும். (வி-ம்.)அறிந்தறிந்தும் - நன்றாய் அறிந்திருந்தும்; பலகால் தனக்கு உதவிகள் செய்திருப்பதை நன்றாய்த் தெரிந்திருந்தும் என்க. மெய்யதா - உடம்பினதாக, வால் குழைத்தல் - வாலை வளைத்து ஆட்டுதல், ஈது அன்பு பாராட்டுதற்கு அறிகுறி. நாய் உவமை அதன் உயர்ந்த பண்பினால் ஈண்டு உயர்வடையதாயிற்று. "பெருமையும் சிறுமையும்"1 என்னும் நூற்பா உரையிற் கழியச் சிறியதாக உவமித்ததற்குப் பேராசிரியர் இதனை எடுத்துக் காட்டினார். (3)
1. தொல். உவம. 19.
|