பக்கம் எண் :

181
 

214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தெடர்பு.

(பொ-ள்.)பலநாளும் பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்து பழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும் நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர் சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்த தொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப் பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர் பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்று கைவிடப் படுதலுண்டோ?

(க-து.)நெஞ்சுப் பிணிப்பு உடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) பலநாளும் சிலநாளும் என்னும் உம்மைகள் முறையே உயர்வு சிறப்பும் இழிவு சிறப்புமாம். பலநாளும் நீத்தாரென்னுமிடத்து அஃது அசை. சிறந்த நட்பு, அருகில் பழகுதலாலேயே ஆவதன்று; நெஞ்சம் பொருந்துதல் முதன்மை என்றபடி. "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்"1என்பது நாயனார் அருளுரை. கோப்பெருஞ் சோழன் - பிசிராந்தையார், அப்பூதியடிகள் - திருநாவுக்கரசர் இவர்களின் நட்பினை ஈண்டுணர்க.

(4)

215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.

(பொ-ள்.)கோட்டுப்பூப் போல மலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற் குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம்மலர்ந்து


1. குறள். 79 : 5.