பக்கம் எண் :

182
 

பின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியது விரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்; தோட்டகயப் பூப்போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை - அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்த நீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள் போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில் மனஞ்சுருங்கும் இயல்பினரை, நயப்பாரும் நட்பாரும் இல் - விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை.

(க-து.)கூடிப் பின் பிரியா இயல்பினரே நேசித்தற்குரியர்.

(வி-ம்.)வேட்டது வேட்டதே நட்பாட்சியாம் என்று மாறுக. வேட்டதென்றது ஈண்டு விரும்பி நேசித்ததென்னும் பொருட்டு. "உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்"1என்பது புறம். இதழ்மிக்க நீர்ப்பூ என்னும் குறிப்பு. முதலில் தோற்றத்தால் நேயம் பெருகித் தோன்றுதல் உணர்த்தும். மலர்தலுங் குவிதலுமென்றற்கு, நேயத்தால் உள்ளம் மலர்தலுங் குவிதலும் என்று கொள்க. நயத்தல், விரும்பி மதித்தல்; நட்டல் - அணுகி நேசித்தல் என்க.

(5)

216. கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

(பொ-ள்.)நட்பில் - நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் - கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்; இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனைத் தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - ஏனை உயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, எண் அரு பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே - மதிப்பு மிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம் ஊன்றிய போது ஊன்றியதேயாம்.


1. புறநா. 214 : 6.