(க-து.)மேன்மேல் உதவிகளில்லாத போதும் நட்புக் குறையாதவரிடமே நேயங்கொள்ளுதல் வேண்டும். (வி-ம்.)நெடுகக் கவனித்தலால் பாக்குமரமும், இடையிடையே கவனித்தலால் தென்னை மரமும் முதலில் விதையிட்ட அளவோடு பனைமரமும் வளர்ந்து பயன்றருவனவாதலால், அவ்வாறு கவனித்தலுடைமையால் நேயம் நிலைபெறுவார்க்கு முறையே அவை உவமமாயின. ‘நட்பில்' என்பதை ஏனையோர்க்குங் கொள்க. ஏனைத் தலையாயார் எனத் தொடர்க. அருமை , ஈண்டு மிகுதிப் பொருளதே, பனைக்கு விதை ஊன்றியதன்றி இறுதிகாறும் பிறிதேதுஞ் செய்யாமையின், ‘இட்டஞான்றிட்டதே' எனப்பட்டது. நட்புக்குப் பழைமை கருதுதல் சிறந்த இலக்கணமாதலின், தலையாயாரைத் தொன்மையுடையாரென்று மேலும் ஆசிரியர் விதந்து கூறினார். நட்பென்னும் உறுப்பினுள் பழைமை பாராட்டுதலை நாயனார் விதிமுகக் கூற்றுள் முதன்மைபெற வைத்து விளக்குதலும், "நட்பிற்குறுப்புக் கெழுதகைமை; மற்றதற், குப்பாதல் சான்றோர் கடன்"1என்றதும் இக் கருத்தினான் என்க. (6) 217. கழுநீருட் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய். (பொ-ள்.)கழுநீருள் கார் அடகேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும் ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய் நன்மை தரும் ; விழுமிய குய்த் துவை ஆர் வெண்சோறேயாயினும் மேவாதார் கைத்து உண்டல் காஞ்சிரங்காய் - சிறந்த தாளிப்புப் பொருந்திய துவைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசி யுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர் கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல் வெறுப்புத் தருவதாகும்.
1. குறள். 81 : 2.
|