(க-து.)உள்ளன்போடு உதவுவோரிடமே நட்புச் செய்தல் வேண்டும். (வி-ம்.)‘கழுநீர்' என்பது அரிசி கழுவிய நீர். இலைக்கறியில் தாழ்ந்ததொன்றைக் குறித்தற்குக் ‘காரடகு ' என்றார். குறிப்பால், முன்னைக்கீரை முதலியன ஈண்டுக் கருதப்படும். துவை, துவையலுமாம். (7) 218. நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு. (பொ-ள்.)நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிக நெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவி செய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?; சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்த இயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும் அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும். (க-து.)உதவும் இயல்பினரே நட்புச்செய்தற்குரியர். (வி-ம்.)நாய்க்காற் சிறுவிரல் இழிவுக்காக வந்த உவமம். ஈக்கால், ஈ என்னும் மிகச் சிறிய பறவையினது கால் ; இது சிறுமைக்கு எடுத்துக்காட்டுவதோர் அளவு. வேண்டும் என்பது ஏவல் கண்ணிய வியங்கோள் ; உம் ஈற்றான் வந்தது.1வாய்க்காலின் இயல்பு. கழனியினிடமிருந்து எஞ்ஞான்றுந் தான் ஓர் உதவி பெறுதலின்றாயினும் உற்ற நேரங்களில் தொலைவிலிருந்து தானே முற்போந்து ஓடி வளம் உதவி அவ் வயல் முழுமையும்
1. சிந். 1 : 172, நச்.
|