விளையச் செய்தல். நண்பரது இருப்பின் சேய்மை அவர் தொடர்பின்மேல் ஏற்றப்பட்டது. (8) 219. தெளிவிலார் நட்பின் பகைநன்று ; சாதல் விளியா அருநோயின் நன்றால் - அளிய இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல புகழ்லின் வைதலே நன்று. (பொ-ள்.)தெளிவிலார் நட்பின் பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகை நலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று - தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ; அளிய இகழ்தலின்கோறல் இனிது - பிறரை நெஞ்சு புண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல் நல்லது ; இல்ல புகழ்தலின் வைதலே நன்று - ஒருவரிடம் இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலே நன்மையாம். (க-து.)நம்பிக்கை யில்லாதவரிடம் நட்புச் செய்தல் ஆகாது. (வி-ம்.)தெளிவென்பது ஈண்டு நம்பிக்கையென்னும் பொருட்டு : "தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகுவார்"1என்புழிப்போல தெளிவிலார் பகையினும் நட்பில் இன்னல் மிகுதியாதலின் பகை நன்றென்றார். அவர் நட்பினால் உண்டாகும் மிக்க இன்னலை விளக்கும் பொருட்டுப் பகை நன்றென்றதல்லால் வேறில்லையாகலின், மற்று அத்தகையாரிடம் பகையுமில்லாதிருத்தலே நன்றென்க. ஏனையவற்றிற்கும் இங்ஙனங் கொள்க. அதிகாரம் நட்பாராய்தலாகலின் ஏனை மூன்றையும்முன்னதற்கு உவமமாக உதைதலுமொன்று. ஆல், ஏ, மற்று : அசை. வைதலே என்பதன் தேற்றேகாரத்தைப் பகை, சாதல், கோறல் என்பவற்றிற்குங் கூட்டுதல் பொருந்தும். "பொருளே உவமம்"2என்பதனால் இதனைக்கொள்க. (9)
1. குறள். 15 : 3. 2. தொல். உவம. 10.
|