220. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. (பொ-ள்.)மரீஇப் பலரோடு பலநாள் முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலே வேண்டும் - பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக் கலந்து பழகிப் பொருளாகத் தக்காரையே நட்புக் கொள்ளல் வேண்டும் ; ஏனென்றால், பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப் பிரிவு - கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும் கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும். (க-து.)பலகால் நன்காராய்ந்த பின்னரே தக்காரோடு நட்புச் செய்தல் வேண்டும். (வி-ம்.)"ஆயந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை, தான்சாந் துயரந் தரும்"1என்றார் நாயனார். மருவி பொருவி, பரிந்து என்பன ஈண்டு விகாரப் பட்டு அளபெடுத்தன. பொருவுதல், ஒத்தல் ; பரிதல். அறுத்தல் : பிறவினைக்கண் வந்தது ; "எருமை கயிறு பரிந்தசைஇ"2என்புழிப்போல, ஈண்டுக் கடித்தலென்னும் பொருட்டு. பொருட்டக்காரென்றது, உண்மைத் தகுதியுடையாரை யென்க. ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. இன்னாமை யென்பது ஈறு தொகுத்தலாய் நின்றது. (10) 23. நட்பிற் பிழைபொறுத்தல் நட்பினரிடத்துக் குற்றம் உண்டாயின், அஃது அறியாமையானதல் அல்லது ஊழினானதால் உண்டாதலன்றி வேறின்றாகலின் பழைமை கருதி அதனைப் பொறுத்து, அவர் நட்பினையே பாராட்டி யொழுகுதல்.
1. குறள், 80 : 2. 2. ஐங் : 10 : 5.
|