பக்கம் எண் :

724
 

(ப. இ.) சொல்லுக் கடங்காத பெருமையும், எல்லையில்லாத முதன்மையும், தன்னின் நீங்காத திருவருள் அம்மையாம் காதற்றுணையும், பேரொடுக்கப் பெருமானுமாய் நின்ற காரணக் கடவுளை வழிபடுதலும், பொருள்சேர் புகழ்கூறுதலும், அவனருட்டொழில் ஐந்தின் பொருண்மை மொழிதலும் பணியாகக் கொண்ட அடியேன் ஆவியை (உழுவார், உழுநிலத்தைத் தம் விருப்பம்போல் செய்வர்) உழவு நிலமாகக் கொண்டு ஆண்டவன் இயக்குகின்றனன்.

(8)

1839. என்தாயோ டென்னப்பன் ஏழேழ் 1பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய 2ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

(ப. இ.) என் அருமைத் தாயுடன் தந்தையும் எழுவகையாக விரிந்த பிறப்பும் தொன்மையிலேயே சிவனுக்கு அடிமை என்று எழுதி ஏற்பித்த ஆளோலையாகிய ஆவணம் அனைவர்க்கும் உண்டு. அதனை நடுவெழுதி ஒப்புவித்தவன் படைப்போனாவன். காப்போனாகிய முகில்வண்ணன் சான்றெழுத்திட்ட சால்பினன் ஆவன். நோயாளியும், அறியாமையுடையாரும், மருத்துவர்க்கும், ஆசிரியர்க்கும், நோய் நீக்கத் தொடங்குவதன் முன்னும் கற்பிக்கத் தொடங்குவதன் முன்னும் அடிமைத் தன்மை வாய்ந்தவராவர். அவ்வத் தொடக்கத்து அடிமையராவர் இதனையே ஊழ்முறை என்பர். நேர் எழுத்து - சான்றாக ஒத்துஇட்ட கை எழுத்து. இதனை மேலெழுத்தெனவும் கூறுப. இது, 'மற்றுமேலெழுத்திட்டார்கள்' என்னும் சேக்கிழாரடிகள் திருமொழியானுணர்க. இருமுதுகுரவர் வரும் அருள்வழியும் மாசற்றிருத்தல் வேண்டுமென்பது 'மாசிலா மரபில் வந்த வள்ளல்' வன்றொண்டர் என்பதனால் விளங்கும்.

(அ. சி.) அன்றே - அநாதியே.

(9)

1840. துணிந்தா ரகம்படி துன்னி உறையும்
பணிந்தா ரகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தா ரகம்படி யாதிப் பிரானைக்
கணிந்தா ரொருவர்க்குக் கைவிட லாமே.

(ப. இ.) திருவடியுணர்வால் உண்மை துணிந்தார் நெஞ்சத்தின்கண் மேலோங்கிப் பொருந்தி உறைவன் சிவன்; இறைபணி நிற்பார் உள்ளத்து அவர் வயப்பட்டு ஒழுகுவன். இடையறாச் சிவநினைவால் அந் நினைவார் உள்ளம் அழகிய திருவுள்ளம் ஆகின்றது. அவ் வுள்ளத்தின்கண் அன்னையோடு கூடிய அத்தனாகிய சிவபெருமான் தாங்கப்படுவோனாய் வீற்றிருந்தருள்கின்றனன். அவ் வுண்மையினை மதித்து எண்ணுவார்க்கு அவ் வெண்ணத்தை எவ்வாற்றானும் கைவிடல் முடியுமோ?

(அ. சி.) பாற்பட்டு - வசப்பட்டு. கணிந்தார் - மதித்தார்.

(10)


1. எம்மானெந்தை. ஆரூரர், 7. 52 - 9.

" எந்தையெந். 8. திருப்பூவல்லி, 2.

2. ஏழுடை. 8. திருக்கோவையார், 7.