15. போசன விதி (ஊண் முறை) 1847. எட்டுத் திசையும் இறைவ னடியவர்க் கட்ட அடிசில் அமுதென் றெதிர்கொள்வர் ஒட்டி யொருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. (ப. இ.) எட்டுத் திசையிலுமுள்ளார் இறைநினைவுடன் முறையுடன் சமைக்கும் அடிசிலாகிய செஞ்சாலிச் சோற்றை இறைவன் நிறையருள் அடியவர்கட்கு என்றே கொள்வர். அதனால் அது சுவையமிழ்தாய்த் திகழும். அவ்வமிழ்தினை எதிர்கொண்டு மெய்யடியார்கட்கு முன் ஊட்டுவர். பின் தாமும் மகிழ்ந்துண்பர். உயிர்நிலைக்களமாகிய உடம்புகளை ஆள்பவர் உயிர்களே. அவ் வுயிர்கள் அவ் வுடலினையும், அதன்பொருட்டுச் சமைக்கும் உணவினையும் சிவனுக்கு என்று எண்ணுதல் வேண்டும். அங்ஙனம் எண்ணாவிட்டால் உண்மையைவிட்டு விலகியிருப்பவராவர். அவர்கள் தாம் விட்டுக்கிடக்கில் விருப்பறியார் என்று அழைக்கப்படுவோராவர். (அ. சி.) விட்டுக்கிடக்கில் - நீங்கி இருந்தால். (1) 1848. அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியல் 1போதாக வுள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேத மறநினைந்து இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே. (ப. இ.) உடலகத்து உயிர்மட்டும் இருக்கின்றதென்று எண்ணுவோர், ஒருபடி தாழ்ந்தோரேயாவர். இவர்கள் உடலே உயிரென்று எண்ணுவோரினும் உயர்ந்தோரே. உண்மையில் உடல் அதனகத்து உயிர், அவ் வுயிரகத்து உயிர்க்குயிராகிய சிவன் ஆகிய முப்பொருள் உண்மையினைக் காணுதல் வேண்டும். அவ் வுணர்வு சிவனருளால் கைகூடுதல் வேண்டும். அங்ஙனம் கைகூடியவர்களே 'அச் சிவன் உள்நின்ற அருளை' அறிந்தவராவர். திருக்கோவிலிலும் மக்களே புழங்குகின்றனர். வீட்டிலும் மக்களே புழங்குகின்றனர். ஆனால் திருக்கோவிலைச் சிவனுடையதென்றும் வீட்டைத் தம்முடையதென்றும் எண்ணுகின்றனர். தமக்குள் சிவன் நின்று அருளால் தம்மை இயக்குகின்றான் என்னும் உண்மையினை உணர்ந்தவர் தம் வீட்டையும் திருக்கோவில் என்றே எண்ணுவர். இது தந்தையார் கட்டிய வீட்டில் தாம் வாழ்ந்தாலும் அவ் வீடு தந்தையார் வீடு என்று எண்ணம் வருவதை ஒக்கும். சிவன் உள்நிற்கும் உண்மையுணர்ந்தவர், உச்சிப்பொழுது வரத் தாம் உண்ணும் ஊண் சிவபெருமான் உறையும் திருக்கோவிலாகிய தம்முடலுக்கெனக் கருதுவர். உண்ணுங்கால் சிவனும் தாமும் வேறெனக்
1. நாவினுக்கு. 12. சம்பந்தர், 567. " பட்டி. அப்பர், 5. 5 - 1. " போதினாலும். சம்பந்தர், 2. 121 - 4.
|