1066
 

2599. ஆதிப் பிரான்தந்த வாளங்கைக் கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமன்றே.1

(ப. இ.) சிவகுருவாய் எழுந்தருளிய ஆதிப்பிரான் திருவைந் தெழுத்தாகிய வாளைத் தந்தருளினன் அதனை உயிரினும் சிறந்த ஒழுக் கமாகக் கைக்கொண்டேன். அங்ஙனங் கைக்கொண்டபின் என்னை வேறுபடுத்தி நன்னெறியினின்றும் விலக்கிப் புன்னெறியிற் புகுத்தவல்லார் எவரும் இலர். மாயாகாரியச் சுவடாகிய குற்றப் பசையும் நேராவண்ணம் அவனருளால் குறிக்கொண்டு சோதிப்பன். ஆதிக்கண் தெய்வமாய் அந்த முழுமுதலாய் நிற்பவன் அவனே. அவனருளால் அவன் திருவடிசேர் இவனும் அவனாவன்.

(11)

2600. அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.

(ப. இ.) தொன்மையேயுள்ள பிறப்பீனும் வித்தாகிய அந்த இருண் மலத்தை, அதுகாரணமாக வரும் அருவுருவாயுள்ள மாயாகாரியங்களை, அவற்றான் ஏற்படும் இருவினைத் தொடக்கினை, அப்பணியால் ஏற்படும் அச்சத்தை, அவ்வச்சத்தால் வரும் பல பிறப்புக்கள் முதலிய எல்லாவற்றையும் சிவகுருவானவர் அருளால் வாட்டினர். வாட்டிச் சிந்தையைத் திருத்தியருளினர். அருளலும் அறுவழி ஆய்வினைப் பொருந்தினர் தக்கோர். பொருந்தவே திருவடியிணையினைச் சேர்ந்தனர். சேரவே சிவமாம் பெருவாழ்வினைப் பெற்றனர். பெற்ற நற்பேற்றால் செயற்கரும் செய்கை செய்யும் தீரராம் சதுரர் ஆயினர், "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலா தார்" (26) எனவும், "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம், கருமமே கட்டளைக் கல்" (505) எனவும் நாயனாரருளிய நற்றமிழ்மறையினை ஈண்டு நாடி இன்புறுக. செயற்குரிய செய்வார் மக்கள். செயற்குரிய செய்கலாதார் மாக்களிலும் தாழ்ந்த கயவர். இவரையே "எற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால், விற்றற் குரியர் விரைந்து" (1080) என நாயனார் அருளினர். ஒன்று - கிடைத்தற்கரிய இம் மக்கள் யாக்கை. விற்றல் - தம்மைப் புலனுக்கு அடிமையாக்கல். விரைந்துகண்ட அளவானே ஆய்ந்தோய்ந்து பாராது முந்திப் புகுந்து. கயவர்-புலனுக்கு அடிமைப்பட்டுப் புன்பிறப்பெய்தும் புல்லியர் கயவர் - மீளா ஆளாய்ப் பள்ளத்து ஆழ்ந்தோர். மக்கள் பிறப்பால் மலர் மிசை ஏகினான் மாணடிசேராது நிலமிசைப் புலனுக்கு அடிமையாய் மீண்டும் மீண்டும் புன்பிறப்பெய்துவோர் போக்கொணாக் கயவராவர்.

(12)

எட்டாம் தந்திரம் முற்றும்


1. மாதர்ப். அப்பர், 4. 3 - 1.