210
 

(ப. இ.) நெற்றிக் கண்ணையுடைய நற்றமிழ்ச் சிவபெருமான் திருப்பெயர் 'நமசிவய' என்ப. இத் திருவெழுத்தைந்தும் ஒருபுடை ஒப்பாக அந்தக்கரணங்கள் நான்கும் ஆள் ஒன்றும் ஆகிய ஐந்தினையும் இயைந்தியக்குவதாகக் கூறலாம். அங்ஙனம் கூறுமிடத்து நகரம் இறுப்பு மெய்யினையும், மகரம் மனத்தையும், சிகரம் ஆளையும், வகரம் எண்ணத்தினையும், யகரம் எழுச்சியினையும் இயக்குவவாகும். இஃது, இறுப்பே மனம் ஆளோ டெண்ணம் எழுச்சி, உறுப்பாம் நமசிவய ஓது எனக் கொள்க. இதுவே கண்ணுதலோன் நாமம் கலந்து உடம்பாய்ப் பண்ணுதல் என்பதாகும். திருவைந்தெழுத்தின் தொகையாகக் கூறப்படும் அகர உகர மகரம் நாதம் விந்து என்னும் ஐந்தும் முறையே, எழுச்சி இறுப்பு மனம் ஆள் எண்ணம் என்பனவற்றை இயைந்தியக்கும் என்பதும் ஒன்று. இவற்றால் திருவடி யுணர்வு கைவந்து பசு பாசம் நீங்கப்பெறும் பசு: சிற்றுணர்வு. பாசம்: சுட்டுணர்வு: அங்ஙனம் நீக்குதற்பொருட்டுத் திருவைந்தெழுத்தின் விரியாகிய செந்தமிழ்த் திருமறை திருமுறை ஆகிய வேதாகமங்களை ஆக்குவித்தருளினன். அவற்றை அன்பியலும் அருளியலும் என இரண்டாகப் பகுத்தருளினன். அன்பியல் உலகியலாகிய அறம் பொருள் இன்பம் ஆகும். அருளியல் வீடாகும். இனம்பற்றி அடியியல் திருவடிப் பேறாகும். இது மண்முதலாக வகுத்து வைத்தான் என்பதனால் பெறப்படும். மண்முதல் என்பது அன்பியலுக்கு நிலவுலக வாழ்க்கை முதல் எனப் பொருள்படும். அருளியல் என்பது மண்முதல் சிவம தீறாகச் சொல்லப்படும் முப்பத்தாறு மெய்களும் கொள்க. உடம்பாயிட : உள்ளுறுப்புக்களைச் செலுத்த. உடம்பு உள்ளுறுப்பிற்கு முதலாகு பெயர். பசு - பிணிப்பி, பசுத்தன்மை - பிணிப்புமை; பிணிப்புத் தன்மை, வேதம் - மறை. இசைத்த - இயற்றுவித்த. பரப்பினை - எங்கும் நீக்கமின்றிச் செறிந்த பரப்பினையுடையாய்.

(அ. சி.) கண்ணுதல் நாமம் - நமச்சிவாய.

(23)

459. அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.1

(ப. இ.) அருளும் அரனும் மரமுங்காழ்ப்பும் போலப் பிரிவிலா இருநிலை ஒரு பொருள். ஒரு நிலை அறிவுநிலை. மற்றொரு நிலை ஆற்றல்நிலை அறிவு நிலையைக் கடந்த நிலையென்றும் ஆற்றல் நிலையைக் கடத்துநிலை என்றும் கூறுப. அருளின்றி அவனும் இல்லை. அவனன்றி அருளும் இல்லை ஆதலின் சிவபெருமான் ஆருயிர்களை உடலுடன் இணைப்பதாகிய படைத்தலைச் செய்யுங்கால் வனப்பாற்றல் நடப்பாற்றலாகிய இருவகை ஒழுக்கத் தாயர்பால் ஒப்புவித்து அவ்விருவரையும் விழுத்திணைத்துணைப் பொருளாக்கினன். அவ்விருவராலும் சுரக்கின்ற திருவருளாகிய அன்பினைத் தன் பால் நண்பாகத் தானே சுரந்தருள அமைத்தனன். கைத்தாயர் : ஒழுக்கத்தாயர், செவிலித்தாயர்; வளர்ப்புத்தாயர். கை - ஒழுக்கம். சீர்சிவமும் பேரருளும் செப்பிற் கடந்த நிலை, பார்கடத்துந் நிலையாம் பண்பு.

(24)


1 அருளுண்டாம். சிவஞானபோதம், 5. 2 - 3.

" செறிகழலு. அப்பர், 614 - 8.

" பரந்தபரா. சிவப்பிரகாசம், காப்பு-2.