530
 

முடியும் பொன்னாடையும் உடையவளும் அவளே. கல்விக்கு முதல்வி. பால்போலும் வெண்ணிறத்தள், ஆருயிர்க்கு முதல்வி, பேரறிவுப் பேராற்றலம்மை, இந்நிலைகளும் அவளே பூவென்பதைப் பரவெளியில் காணப்படும் ஆயிர இதழ்த்தாமரை எனவும் கூறுவர்.

(அ. சி.) நாவுக்கு நாயகி - வாகீச்சுரி. பூவுக்கு நாயகி - இலக்குமி. பாவுக்கு நாயகி - வாணி. ஆவுக்கு நாயகி - மனோன்மனி.

(69)

1363. அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்தவர் காரணி காணுமே.

(ப. இ.) திருவருளம்மை தொன்மையில் முப்பொருளுண்மை தேற்றும் வலது திருக்கையில் மெய்யுணர்வடையாளமும், இத் திருக்கையை ஒத்த இடது பக்கத்துத் திருக்கையில் சிவஞானபோதச் சுவடியும், மற்றோர் வலது கையில் பளிங்கு மணியும், அதனையொத்த இடது கையில் சிரகமாகிய கெண்டியும் அமைந்த திருக்கோலத்தள். இத் திருக்கோல வழிபாட்டின் வாயிலாகத் திருச்சிற்றம்பலமாகிய பேரறிவுவெளி காணப் பெறும். அதுகண்டவர் திருவடியின்பம் துய்ப்பர். இவற்றிற்கெல்லாம் காரண காரணியாக இருப்பவள் திருவருளம்மையே.

(அ. சி.) அன்று - சிருட்டி ஆரம்பத்தில். இருகையில் - சின் முத்திரையைக் காட்டும் கையினாலும், சுவடி ஏந்திய மற்றொரு கையினாலும். அளந்த பொருண்முறை - அளவு படுத்திய ஞானப் பொருள். வெண்குண்டிகை - வெள்ளிய கமண்டலமும், படிக மாலையும்.

(70)

1364. காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

(ப. இ.) எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பன எழுத்துக்களே. அவற்றிற்குரிய தெய்வங்கள் ஐம்பத்திரண்டு. அத் தெய்வங்களை இயக்கும் திருவருட் கன்னியும் ஐம்பத்திருவராவர். இக் கன்னியும் நவாக்கரி சக்கரத்து மறைந்து நின்றருள்வள். எழுத்து ஐம்பத்தொன்று, நவாக்கரி சக்கரம் ஒன்று ஆக ஐம்பத்திரண்டுக்கும் தெய்வமும் கன்னியரும் இவர்கள் ஐம்பத்திருவராவர்.

(அ. சி.) சத்திகள் ஐம்பத்திரண்டு - அக்கர சத்திகள் 51-ம், நவாக்கரி சக்கர சத்தி 1-ம் ஆக 52.

(71)

1365. நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடிற்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினி லாடு மணியது காணுமே.