1527. இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. (ப. இ.) புன்னெறிச் சென்று துன்புற்றிருந்து அழுவாரும் மக்கள் தன்மையாம் இயல்பு குன்றினாரும் நன்னெறி நான்கு தொண்டுகளாம் நற்றவத்தை மேற்கொண்டு அவ்விடத்து அண்ணலாகிய சிவபெருமானை வல்லவாறு 'சிவயநம' என எண்ணினால் அவன் எவ்வகை வருத்தமும் எய்தி வருந்தாதபடி செய்தருள்வன். சிவவுலகத்தார் நேர்தலைவனாகிய சிவபெருமான் திருவடியுணர்வினை நல்கியருள்வன். அதனால் இனிப் பிறப்பில்லையாகிச் சிறப்பு வந்துறும், பெருந்தன்மை - திருவடியுணர்வு. (அ. சி.) இயல்பு - தன்னிலைமை. வானவர்கோன் - சிவன். பெருந்தன்மை - ஞானம். (3) 1528. தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கரந்து பிறப்பார்கள் நீரறி வாரநெடு மாமுகி லாமே.1 (ப. இ.) குற்றமாகிய தூர்வையைக் குணமென அறிந்து தம் மனம் போல்ஒழுகுபவர் யாண்டும் உள்ளுறு துணையாக நிற்கும் அம்மையப்பரின் நிலைப்பில்லாதவராவர். நிலையாத உலகமே பெரிதென மயங்கி அவ்வழியொழுகுவார் உலகப் பயனை நுகர்ந்து பிறப்பர். அறியாமை வயப்பட்டுத் தம்முனைப்புடன் ஒழுகுவார் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இன்னலுறுவர். திருவடியுணர்வாகிய அருள்நீர் அறிவார் அத் திருவடியுணர்வாக நின்று திருவருள் வண்ணமாவர். மாமுகில்-திருவருள் வண்ணம். இவர் சிவனடி இன்பம் எய்துவர். நீர் - தன்மை. (அ. சி.) தூர் அறிவாளர் - ஈசனைத் தமக்குப் புறம்பாக நினைப்பவர். துணைவர் - பெத்தம் முத்திகளில் துணையாய் இருப்பவர் ஈசன் என்று: பார் அறிவாளர் - உலக அறிவுடையோர். படுபயன் - உலகப் பயன்களை. உண்பர் - துய்ப்பர். கார் அறிவாளர் - அஞ்ஞானிகள். கரந்து பிறப்பார் - செத்துப் பிறப்பார். நீர் அறிவார் - சிவத்தின் தன்மையை அறிவார். நெடுமாமுகில் - பெருமை தங்கிய கார்முகில் போன்றவர். (4) 1529. அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே.2
1. படுபயன். திருக்குறள். 172. " களவென்னும். திருக்குறள். 287. 2. செஞ்ஞாயிற்றுச். புறநானூறு. 30. " துன்பக். அப்பர், 4. 92 - 6. " ஆவதெ. 12. கண்ணப்பர், 67.
|