890
 

(ப. இ.) தூயநிலையில் பொருந்தியவர் சிவபெருமானின் திருவருள் விளக்கத்தால் நிலைப்பாகிய மும்மல காரணத்தையும் தோன்றி யொடுங்குவதாகிய அவற்றின் காரியத்தையும் உண்மைகண்டு எண்மையாக நீங்கித் திண்மையோங்கிய உரனுடைப் பண்பினராவர். ஈண்டுச் சத்தெனப்படுவன மும்மலமாகும். அசத்தெனப்படுவன மும்மல காரியமாகும். இவற்றுடன் தனித்தனியாகப் பிரிவுபட்டுப் பிணிப்புறுத்தும் மருளாக்க விரிவாகிய மாயேயம் அறுபதும் (2107) தனித்தனிப் பாசம் எனப்டும். அவற்றின் தொத்தாகிய தொடர்ச்சியும் விட்டவராவர். பெருமயக்கத்தைச் செய்யும் மத்த இருளும் விட்டவராவர். இவையனைத்தும் விட்டவரே தூயோராவர். தூயோர் - சுத்தர். தொத்து: தொடர்பு. இது தொந்தம் எனவும் வரும். அது 'தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செய்யும்' என்னும் அப்பர் செப்பும் அருண்மொழியானுணரலாம். விட்டிட - முற்றும் அகல.

(அ. சி.) மத்த - மயக்கத்தைச் செய்யும். தொத்து அற - தொடர்ச்சி நீங்க.

(20)

2207. தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பாற் சகலங் கலாதிப் பிறிவதாஞ்
சொற்பாற் புரிசுத்த கேவலஞ் சாக்கிரந்
தற்பாற் புரிவது தற்சுத்த மாகுமே.

(ப. இ.) தூயநிலையில் தான் தனித்துநிற்கும் வீடாகிய பற்றறுதி ஆருயிர் தனித்து நிற்பதாகும். இந் நிலையினைத் தூய புலம்பு என்னலாம். தூய புலம்பு - சுத்த கேவலம். தூய புணர்ப்பு உழைப்பு முதலாகச் சொல்லப்படும் தூவாமாயையினின்று விலகுவதாம். தூய புரிவாவது சொல்லப்படும் தூயபுலம்பும் புணர்ப்பும் தன்னுணர்வுக்கும் தோன்றாதொழிவது. இதுவே தன் தூய்மையாகும். உழைப்பு - கலைமெய்.

(21)

2208. அறிவின்றி 1முத்தன் 2அராகாதி சேரான்
குறியொன்றி3 லாநித்தன் கூடான் கலாதி
செறியுஞ் செயலிலான் றினங்கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலந் தானே.

(ப. இ.) ஆருயிர்க்கிழவன் புலம்பாகிய கேவல நிலையில் மலச்செறிவுடன் உள்ளவன். செறிவு - வியாபகம்; பரப்பு. அந் நிலையில் மருளாக்கக் கருவிகள் கூடாமையால் அறிவு முன் விளங்கப்பெறான். மருளாக்கம் - மாயாகாரியம்; அதனால் உடம்பில்லாதவன் ஆவன். ஈண்டு முத்தன் என்பது அமூர்த்தன் என்றிருத்தல் வேண்டும். அமூர்த்தன் - உடம்பு முன்னில்லாதவன். இது சிவஞானசித்தியார் ஓதும் பாடமாகும். அம் முறையில் பார்த்தால் 'அறிவின் றமூர்த்தன்' என்றிருத்தல் வேண்டும். உழைப்புமெய் முதலிய தூவாமாயைக் கருவிகளுடன் முன் சேர்தலில்லாதவன். உவப்பாகிய விழைவு முன்னில்லாதவன் குறி - விழைவு.


1. அறிவில. சிவஞானசித்தியார், 4. 3 - 7.

(பாடம்)2. மூத்தோன்.

3. " லாதித்தன்.