2225. தன்னை யறியா துடலைமுன் தானென்றான் தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான் உன்னுந் துரியமும் ஈசனோ டொன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடுந் 1தானன்றே. (ப. இ.) ஒருவன் உலகநூல் கேட்பதன்முன் தன்னுடைய வீடு மனைவி மக்கள் மாடு முதலிய புறப்பொருள்களையே தனக்கு உயிராகக் கருதி ஒழுகிவந்தனன். உலகநூல் கேட்டபின்னர்த் தன்னுடம்பே தனக்கு உயிர் எனக் கொண்டொழுகினன். அந்நிலையில் அவன் தன்னுடம்புக்கு வேறாகத் தான் ஒருவன் உண்டென்று உணர்கிலன். அக் குறிப்புத்தான் தன்னையறியாது முன்பெல்லாம் உடலைத் தானென்றான் என்பது. பின் வீட்டியல் நூற்களைப் படிப்படியாகக் கேட்டு அவ்வழி ஒழுகிவந்தனன். வரத் திருவருள் துணையால் தன்னைக் கண்டனன். கண்டு செந்நெறி யொழுகினன். அதனால் நன்னெறி நான்மையினையும் எய்தினன். அதனால் அப்பால் நிலையாகிய துரியங் கண்டனன். அந்நிலை சிவனுடன் இரண்டறக் கலக்கும் நிலைக்கு முன்னுள்ள நிலையேயாகும். அவனுக்கு அக் கலப்பு எய்தாவிடின் பின்னையும் வந்து பிறந்திடுவன். (அ. சி.) தன்னையறியாது உடலை முன் தான் என்றான் என்று பிரிக்க. (36) 2226. சாக்கிரந் தன்னில் அதீதந் தலைப்படில் ஆக்கிய வந்த வயிந்தவ மானந்தம் நோக்கும் பிறப்பறு நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் 2யாவே. (ப. இ.) நனவு நிலையில் அப்பால்நிலை வந்து பொருந்தினால் திருவருள் மாயாகாரியமாகிய வயிந்தவத்தின்பால் கொண்ட மாலாகிய மயக்கம்கெடத் திருநோக்கம் செய்யும். அதனால் பிறப்பறும். பிறப்பறவே பெரும் பேரின்பப்பேறாகிய வீடு கைகூடும். மாற்றம் மனம் என்னும் கருவிகள் ஆண்டுப் பொருந்துதலைச் செய்யா. மாற்றம் - வாக்கு. அப்பால் நிலையாவது உடையானை உன்னி உடைமையை உன்னாதிருத்தல். நினைத்த பொருளே தோன்றுதல் அனைத்திடத்தும் தினைத்தனையும் மாறா வுண்மைத் தெளிவாகும். மாற்றமாகிய சுட்டுணர்வும் மனமாகிய சிற்றுணர்வும் அப்பால் நிலையின்கண் வந்து பொருந்தா. உடையான் - சிவன். உடைமை - உலகம். (அ. சி.) வயிந்தவ மால் - மாயா மயக்கு. நந்த - கெட. (40) 2227. அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்து ளேதெனில் அப்பும் அனலுங் கலந்ததவ் வாறன்றே.
1. தானமியா. சிவஞானசித்தியார், 8. 2 - 15. " தம்மிற். திருக்களிற்றுப்படியார், 44. 2.துரியங். 66.
|