பிறப்புச் சிறப்பாகிய அவம் சிவம் என்னும் இரண்டினையும் அருளால் அறிவாரே அறிவுடையராவார். அவ் விரண்டினையும் அருளால் அறிந்தால் அவ் விரண்டினையும் சிவபெருமான் நமக்குக் கூட்டுவிப்பதும் நாம் புரியும் பிணிச்செயல் பணிச்செயல்களின் பயனால் ஆகும் அவையும் அவன் திருவருளேயாம். அருளாலறிவதென்பது அருளை அறிவிக்கவேண்டி விண்ணப்பிக்கும் அடிமை அன்பால் அறிவதென்பதாம். கூட்டுவிப்பதும் அருளே என்பது உடனுக்குடன் இருவினைப் பயன்களைக் கூட்டு வியாதொழிந்தால் அவை மிகவும் முதிர்ந்து பின்னர்ப் பதமாக்கும் புதுச் செயலையும் கொண்டுவந்து தரும். இதற்கு ஒப்பு உலர்ந்த விறகை நிலத்தில் தொகுத்துவைத்துப் பின் எடுத்து அடுப்பில் வைத்து எரிப்பது எளிது. அதனை நீரில் தொகுத்துவைத்தோ மழையில் நனையவிட்டோ எடுத்து அடுப்பில் வைத்தால் எரியுமோ? எரியாதல்லவா? பின் என்ன செய்தல்வேண்டும். அவற்றை வெயிலில் சுமந்து உலரவைப்பதாகிய புதுச் செயலையும் செய்தல்வேண்டும். அங்ஙனம் செய்ய இடந்தராமல் ஆருயிர் மனம்போல் விடாமல் ஆண்டவன் வினைப்பயனை முனிவுடன் அவ்வப்போது தந்துவிடுகின்றனன். அங்ஙனம் செய்வது எத்துணைப் பேரருள் என்று எண்ணுமின். இதனைத் திருவள்ளுவநாயனார் 'இளைதாக முள்மரம் கொல்க களையுநர், கைகொல்லும் காழ்த்த இடத்து' (879) என்னும் செந்தமிழ்ப் பொதுமறையால் குறித்தருளுதல் காண்க. பிணிச்செயல் - தொழில். பணிச்செயல் - தொண்டு. தொழிலுக்குப் பயன் பிறப்பு. தொண்டுக்குப் பயன் சிறப்பு. கூலியால் செய்வது தொழில். குணத்தால் செய்வது தொண்டு. (அ. சி.) அவம் - பிறப்புக்கு ஏதுவாய செயல். (37) 2302. அருளான சத்தி யனல்வெம்மை போலப் பொருளவ னாகத்தான் போதம் புணரும் இருளொளி யாய்மீண்டு மும்மல மாகுந் திருவரு ளானந்தி செம்பொரு 1ளாமே. (ப. இ.) அனலும் அதன் வெம்மையும் பொருளால் ஒன்றாய்ப் பண்பால் இரண்டாய் விளங்கும். அப் பண்பிரண்டும் ஒளியும் சூடும் என்ப. அதுபோல் திருவருளும் சிவபெருமானும் ஒருவனேயாம். அத் திருவருளே ஆற்றலாகிய சத்தியாகும். அவ் வருள் மெய்ப்பொருளோ டொன்றாகும். அவ்வருளின் வடிவு தடையிலா ஞானமாகும், ஆணவம் 'இருளொளிர இருண்ட' இருளாகும். அவ் வானவத்தோடு மீண்டும் மாயை, கன்மம், மாயையின் விரிவாகிய மாயேயம் என்னும் மும்மலமும் கூடும். அங்ஙனம் கூடியவற்றை அகற்றுவதன் பொருட்டுத் திருவருள் வண்பேரருளின்ப நடப்பாற்றலாகக் கூடும். கூடி ஐம்மலமாகும். அந் நடப்பாற்றல் உடனாக இருந்து இம் மலங்களை அகற்றுவிக்கும். 'மும்மலம் ஆகும்' என்பதனை மாறுதல் ஆகும் என ஒருசொல் வருவித்துப் பொருள் கொள்க. அத் திருவருள் நந்தாச் செம்பொருளாம் சிவபெருமானைக் காட்டியருளும். காட்டவே ஆருயிர்கள் சிவபெருமானின் திருவடியுணர்வினைப் பெறும். பெறவே பேரின்பப் பெருவாழ்வு எய்தும். (அ. சி.) அருளான சத்தி - அருள் சத்தி. போதம் புணரும் - ஞானம் ஆகும். (38) 1. அருளது. சிவஞானசித்தியார், 5. 2 - 8.
|